Published : 16 Mar 2023 04:45 AM
Last Updated : 16 Mar 2023 04:45 AM

மாணவர் வருகை அதிகரித்திருப்பது ‘காலை உணவு’ திட்டத்தின் வெற்றி - ‘தி இந்து’ செய்தியை குறிப்பிட்டு முதல்வர் பெருமிதம்

சென்னை: பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக, 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பிறகு, 2-ம் கட்டமாக மேலும் 56 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

அப்போது, ‘‘மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும்’’ என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாணவர்கள் வருகைஅதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,543பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இவற்றில் 1,319 பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.

அது மட்டுமின்றி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படும் தொடக்கப் பள்ளிகளில் 100 சதவீத வருகை பதிவாகியுள்ளது.

கிருஷ்ணகிரி (98.5%), கரூர் (97.4%), நீலகிரி (96.8%) மாவட்டங்களிலும் மாணவர் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 1,086 பள்ளிகளில் 20 சதவீதமும், 22 பள்ளிகளில் 40 சதவீதமும் மாணவர்கள் வருகை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் கூறும்போது, ‘‘காலை உணவு திட்டம் மூலம் தினமும் சராசரியாக 1.48 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். காலை உணவுக்காக மாணவர் ஒருவருக்கு அரசு ரூ.12.71 செலவிடுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான செய்தி நேற்று வெளியானது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘மாணவர் வருகை அதிகரிப்பு, முதல்வரின் காலை உணவு திட்டத்தின் வெற்றி. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அளித்த அறிக்கை அடிப்படையில், ‘தி இந்து’ நாளிதழில் சங்கீதா கந்தவேல் எழுதியுள்ள செய்தி. கல்வி.. திராவிட வேட்கை’ என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x