Published : 16 Mar 2023 04:21 AM
Last Updated : 16 Mar 2023 04:21 AM

நாடு முழுவதும் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் - சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 3,000 பேர் பாதிப்பு

சென்னை அண்ணா நகரில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

புதுடெல்லி / சென்னை: நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘எக்ஸ்பிபி.1.16’ புதிய வகை கரோனா காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று, நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் நாடு முழுவதும் குழந்தைகள், சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் என சுமார் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பல குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றுஒரே நாளில் தமிழகத்தில் 44 பேர் உட்பட நாடு முழுவதும் 617 பேருக்கு கரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளது. 117 நாட்களுக்கு பிறகு தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. 4,197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா பாதிப்பால் நேற்று கர்நாடகாவில் 2 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர், உத்தராகண்ட்டில் ஒருவர் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கு பரவல் அதிகரிப்பதற்கு,வேகமாக பரவும் எக்ஸ்பிபி.1.16 என்றபுதிய வகை கரோனா காரணமாகஇருக்கலாம் என்று சர்வதேச மற்றும்இந்திய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்தியா, புருனே, அமெரிக்கா, சிங்கப்பூரில் கரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு பரவும் கரோனா வகைகளை ஆராய்ந்ததில், சில பகுதிகளில் எக்ஸ்பிபி.1.16 என்ற புதிய வகை வைரஸ் வேகமாக பரவுவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் இந்த புதிய வகை உருவாகியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதிய கரோனா வகைகளை கண்காணிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் டாக்டர் விபின் வசிஷ்டா கூறும்போது, ‘‘முந்தைய எக்ஸ்பிபி.1 மற்றும் எக்ஸ்பிபி.1.5 கரோனா வகைகள் உலகின் மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தற்போது பரவும் எக்ஸ்பிபி.1.16 என்றபுதிய வகை கரோனா கவலைகொள்ள வைக்கிறது. இதில் உள்ள இரு‘ஓஆர்எஃப்9பி’ திரிபுகள், நோய் தடுப்புசக்தியில் இருந்து தப்பி பாதிப்பைஏற்படுத்துகின்றன’’ என்றார்.

இந்நிலையில், இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கான சிகிச்சை, தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்ஃப்ளூயன்சா தொற்று சில வாரங்களாக வேகமாக பரவி வருகிறது. லேசான காய்ச்சல், இருமல்,தொண்டை வலி, உடல் வலி உள்ளவர்களுக்கு பரிசோதனை, ஓசல்டாமிவிர் மருந்துகள் தேவை இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டால்போதும். முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓசல்டாமிவிர் மருந்து உட்கொள்ள வேண்டும். மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல், மயக்க நிலை உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். மருத்துவத் துறையினர், கர்ப்பிணிகள், சுவாச நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x