Published : 16 Mar 2023 07:09 AM
Last Updated : 16 Mar 2023 07:09 AM
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் நாளை (மார்ச் 17) பிரம்மாண்டமான முறையில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் முதல், உயர் அலுவலர்கள் வரை 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த முகாமை முதல்வர்தொடங்கிவைக்க உள்ளார்.
தமிழகத்தில் `எச்3என்2' என்ற இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களைக் கண்டறிந்து, மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது.
இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையிலோ அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவிலோ அனுமதிக்கும் நிலை இதுவரை ஏற்படவில்லை. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்தது தொடர்பான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இறந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படும்.
கரோனாவுக்குப் பிறகு, இளம்வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக ஏற்கெனவே இதயவியல் துறைமருத்துவர்களுடன் ஆலோசித்துள்ளோம்.
இது சம்பந்தமான உலகளாவிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று உலகசுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தஇதயவியல் மருத்துவர்களும் ஆய்வு மேற்கொண்டு, உரியதீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT