Published : 11 Sep 2017 09:49 AM
Last Updated : 11 Sep 2017 09:49 AM

ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் வழங்கும் அதிசயம்: தனித்தன்மையோடு மிளிரும் கற்றாழைமேடு அரசு பள்ளி மாணவர்கள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் வடக்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ளது கற்றாழைமேடு எனும் குக்கிராமம். இந்த மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதி. போக்குவரத்துக்கு ஏற்ற சாலையோ, பேருந்து வசதியோ கிடையாது. அத்தியாவசியத் தேவைக்கான பொருட்கள் வாங்குவதற்கான கடைகூட இந்த ஊரில் கிடையாது. வீடுகள், வயல்கள், ஒரு கோயில் தவிர அந்த கிராமத்தில் இருப்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மட்டுமே.

விவசாயக் கூலி வேலைக்காக வெளியே செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கான ஓர் இடமாக மட்டுமே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கருதி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் 2008-ம் ஆண்டு கற்றாழைமேடு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சலீம் பாபு பொறுப்பேற்றார். அதன்பிறகு இந்த அரசு தொடக்கப் பள்ளி ஒரு முன்மாதிரி அரசுப் பள்ளியாக முன்னேறத் தொடங்கியது.

ஊர் மக்களிடம் ஆசிரியர்கள் பேசியதன் பலனாக, பள்ளிக்கென ஓர் இடம் தானமாகப் பெறப்பட்டது. அந்த இடத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புத்தம் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. டீக்கடைகூட இல்லாத ஊர் என்பதால் பள்ளிக் கட்டிட கட்டுமானப் பணிக்கு வெளியூர் தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. இதனால், ஊர் மக்களே கல், மண் சுமந்து பள்ளிக் கட்டிடத்தை கட்டி முடித்தனர். மேலும், பொதுமக்கள் அளித்த நன்கொடையால் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் ரூ.2 லட்சம் மதிப்பில் உருவானது.

தலைமை ஆசிரியர் சலீம் பாபு, கிராமத்தின் சிறுவர்களிடம் தொடர்ந்து பேசி படிப்பின் மீது அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கினார். படித்து முன்னேற தொடர்ந்து வழிகாட்டினார்.

கடந்த காலங்களில், பலரும் தொடக்கப் பள்ளியோடு படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் சென்றனர். அந்த நிலைமை தற்போது பெருமளவில் மாறியுள்ளது. எந்த மாணவரும் படிப்பை பாதியில் விடாமல் தொடர்ந்து படிக்கின்றனர்.

கிராமத்து மாணவர்களிடம் சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கும் இந்தத் தொடக்கப் பள்ளியே காரணமாக உள்ளது. தொடக்கப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தினமும் குளித்து, தலைவாரி நேர்த்தியாக உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். நேரமின்மை, உரிய வசதியின்மை போன்ற காரணங்களால் சில மாணவர்கள் நேர்த்தியாக வர இயலாத நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு பள்ளியிலேயே எண்ணெய், சோப்பு, சீப்பு, பவுடர், கண்ணாடி ஆகியவற்றுடன் கூடிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவர்கள் அனைவரும் மிகுந்த நேர்த்தியோடு காணப்படுகின்றனர். புதன்கிழமைதோறும் வெள்ளைச் சீருடை, டை, பெல்ட் என தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு நிகராக இந்தப் பள்ளியின் குழந்தைகள் காட்சியளிக்கின்றனர்.

பள்ளியின் வளர்ச்சிக்கு கிராம மக்களின் பங்களிப்புதான் மிக முக்கிய காரணம் என்று ஆசிரியர்கள் பெருமிதத்தோடு கூறுகின்றனர். பள்ளிக்குத் தேவையான பல வசதிகளைக் கிராம மக்கள் செய்து கொடுத்துள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, ஸ்மார்ட் வகுப்பறை, ஒலிபெருக்கி சாதனங்கள், விளையாட்டு உபகரணங்கள் என பல வசதிகள் இப்பள்ளியில் உருவாக கிராம மக்கள் உதவியுள்ளனர்.

இவ்வாறு பல்வேறு வசதிகள் பெருகியதன் காரணமாக, மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதோடு, அவர்களது கற்றல் திறனும் மேம்பட்டிருப்பதாக தலைமை ஆசிரியர் சலீம் பாபு கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:

எங்களது கற்றாழைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இப்போது அனைத்து வசதிகளும் உள்ளன. இதனால் மாணவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த ஆர்வத்தோடு பள்ளிக்கு வருகின்றனர். இங்கு தமிழ்வழி வகுப்புகள் மட்டுமே உள்ளன. தமிழ்வழியில் படித்தாலும் 5-ம் வகுப்புக்குப் பிறகு தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் பலரும் சேருகின்றனர். ஆங்கிலம் உட்பட எல்லா பாடங்களிலும் அவர்களது கற்றல் திறன் மேம்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

வெறும் பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்கள் மட்டுமின்றி, வாழ்க்கைக் கல்விக்கான பல அம்சங்களும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. வங்கிகளில் பணம் செலுத்தும் நடைமுறை, அஞ்சலக நடைமுறை, அழைப்பிதழ்கள் தயாரிக்கும் முறை, ஒரு நிகழ்வை செய்தியாக தொகுத்து எழுதும் திறன் என வாழ்க்கைக்கு தேவையான பல பயிற்சிகள் தொடக்கப் பள்ளி நிலையிலேயே மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

மேலும், மாணவர்களிடம் தலைமைப் பண்மை வளர்ப்பதற்கான ஏற்பாடுகளும் இங்கு உள்ளன. சுகாதாரக் குழு, தோட்டம் பராமரிப்புக் குழு, கழிப்பறை கண்காணிப்புக் குழு, குடிநீர் பாதுகாப்புக் குழு என பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் ஒரு குழுவில் இடம்பெற வேண்டும். இதனால், ஒரு செயலை திட்டமிட்டு சிறப்பாக செய்யும் ஆற்றலும், குழுவாக சேர்ந்து செயல்படும் ஆற்றலும், தலைமைப் பண்பும் மாணவர்களிடம் வளர்கின்றன.

பள்ளியில் கழிப்பறைக்கு செல்வதற்காக தனியாக காலணிகள் உள்ளன. கழிப்பறை செல்லும் மாணவர்கள் அந்தக் காலணிகளை அணிந்துதான் செல்ல வேண்டும். கழிப்பறை சென்று வந்த பிறகு கைகளைச் சோப்பு போட்டு கழுவிய பிறகுதான் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். அதேபோல, உணவு இடைவேளையின்போதும் மாணவ, மாணவிகள் அனைவரும் சோப்பு போட்டு கை கழுவிய பிறகே சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர்.

பள்ளியில் சேரும்போது ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக்கன்று தரப்படுகிறது. அந்த கன்று உடனடியாக நடப்படும். அந்த மாணவர் பள்ளியைவிட்டுச் செல்லும்வரை தினமும் தண்ணீர் ஊற்றி அந்த மரக்கன்றைப் பராமரிப்பது அவரது பொறுப்பு. மரங்களுக்கு இடையே காய்கறித் தோட்டம் அமைத்து, அதன்மூலம் கிடைக்கும் காய்கள், சத்துணவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

மாணவர்கள் தினமும் மதியம் அரை மணி நேரம் தமிழ் செய்தித்தாள்கள் படித்து, அவரவருக்குப் பிடித்தமான செய்தி குறித்து சக மாணவர்களுடன் குழு விவாதம் செய்கின்றனர். இதனால் வாசிக்கும் திறன், கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடும் திறன் ஆகியவை அதிகரிக்கின்றன.

பல்லாங்குழி, கல்லாங்காய், ஆடு புலி ஆட்டம், கோலி குண்டு, பம்பரம் சுற்றுதல், ஊஞ்சல் ஆடுதல், கிட்டிபுல், கவட்டை பெல்ட் கொண்டு குறிபார்த்து அடிப்பது ஆகிய தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த விளையாட்டுகளால் மாணவர்களிடம் மன அமைதி அதிகரிக்கிறது. கவனச் சிதறல் தடுக்கப்படுகிறது. கை, விரல், கண் ஆகிய உறுப்புகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது என்றார்

தலைமை ஆசிரியர்.

ஏட்டுக் கல்வியுடன் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய பயிற்சிகளும் இப்பள்ளியில் வழங்கப்படுகின்றன. இதனால், இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையோடும், தனித்தன்மையோடும் மிளிர்கின்றனர்! தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 90928 41161.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x