Published : 15 Mar 2023 07:11 PM
Last Updated : 15 Mar 2023 07:11 PM

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு மீண்டும் ஜூனில் வாய்ப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

தஞ்சாவூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு மீண்டும் ஜூனில் வாய்ப்பு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பொதுத் தேர்வு வரும்போது மாலை நேரத்தில் மாணவர்களுக்கு ஒரு மணிநேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிநவீன ஆய்வகம் மூலமும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். என்றாலும், நம்முடைய மாணவர்கள் எந்த வகையிலும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சமாக இருந்தது. இடைநிற்றலான குழந்தைகளைக் கண்டுபிடித்து நிகழ் கல்வியாண்டில் சேர்த்தும், அவர்கள், ஓரிரு நாட்கள் வந்து, மற்ற நாள்கள் வரவில்லை என்றாலும், அவர்களை நீக்குமாறு நாங்கள் அறிவுறுத்தவில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கல்வி தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை விட்டுவிடாமல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்குமாறு அறிவுறுத்துகிறோம். அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

இடைநிற்றலான 1.90 லட்சம் மாணவர்களை அடையாளம் கண்டு நிகழ் கல்வியாண்டில் சேர்க்கவில்லை என்றால், இத்தேர்வில் 6.60 லட்சம் முதல் 6.70 லட்சம் பேர்தான் எழுதுவர். ஆனால், இப்போது 8.81 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆண்டுதோறும் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 4.5 முதல் 4.6 சதவீதமாக இருப்பது வழக்கம். இது, நிகழாண்டு 5 சதவீதம் வரை வந்துள்ளது. இது தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கல்வித் துறை அலுவலர்களிடம் கூறியிருக்கிறோம்.

மேலும், இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இன்று (வியாழக்கிழமை) இணையவழியில் கூட்டம் நடத்தவுள்ளேன். இதற்கான காரணத்தையும் கண்டறியுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். அடுத்து பத்தாம் வகுப்புத் தேர்வு தொடங்கப்படவுள்ளதால், அதற்கான ஆயத்தப் பணியும் தொடங்கிவிட்டோம். மாணவர்கள் அச்சப்படாமல் பொதுத் தேர்வு எழுதுவது தொடர்பாக, அறிவுரைகள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிகழாண்டு பொதுத் தேர்வுக்கு வராதவர்களுக்கும், தேர்வில் பங்கேற்று எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கும் தனியாகச் சிறப்பு வகுப்புகள் நடத்தி, அவர்களை ஊக்கப்படுத்தி, வரும் ஜூன் மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் பங்கேற்கச் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதற்காக முதல்வரும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலைமை படிப்படியாகக் குறையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x