Published : 15 Mar 2023 01:15 PM
Last Updated : 15 Mar 2023 01:15 PM
சென்னை: புதுவையில் பி பிரிவு பணிகளுக்கு இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அரசிதழ் பதிவு இல்லாத பி பிரிவு பணிகளுக்கும் இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் புதுவையில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சமூக அநீதி சரி செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்!
புதுவையில் மேற்கண்ட பணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பா.ம.க. தான் தொடர் போராட்டங்களை நடத்தியது. நானே களமிறங்கி போராடுவேன் என்று எச்சரித்திருந்தேன். அதன் பயனாக இட ஒதுக்கீடு மீண்டும் கிடைத்துள்ளது. இது பா.ம.க.வின் வெற்றி!
புதுவையில் இன்னும் முழுமையான சமூக நீதி நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசிதழ் பதிவு இல்லாத பி பிரிவு மற்றும் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஏ பிரிவு மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற பி பிரிவு பணிகளுக்கு இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை!
அனைத்து பிரிவு அரசுப் பணிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூக நீதி ஆகும். இதை உணர்ந்து ஏ பிரிவு மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற பி பிரிவு பணிகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும். அது குறித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையைப் பெற வேண்டும்!" இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அரசிதழ் பதிவு இல்லாத பி பிரிவு பணிகளுக்கும் இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் புதுவையில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சமூக அநீதி சரி செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்!(1/4) pic.twitter.com/FBcx1xYZ9q
— Dr S RAMADOSS (@drramadoss) March 15, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT