Published : 15 Mar 2023 06:23 AM
Last Updated : 15 Mar 2023 06:23 AM

வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; தகவல் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: இளைய தலைமுறையினர் தங்கள் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு அடிமையாகிவிடக் கூடாது என்று ‘பிரிட்ஜ்’ 50-வதுமாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் ‘பிரிட்ஜ்’ 50-வது மாநாட்டை சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தகவல் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பெரும்மாற்றம், புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துறையில் முதலீட்டுக்கு இன்றியமையாத அறிவியல், சமூககட்டமைப்பு, மனித ஆற்றலை தமிழகம் முழுமையாக கொண்டுள்ளது. இதை பயன்படுத்தி, ஐ.டி. துறையில் நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தமிழகம் முன்னோடி: தகவல், தொலைத்தொடர்பு சார்ந்த தேசிய, மாநில மின் ஆளுமைதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாகஉள்ளது. தமிழ்நாடு தகவல், தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் சார்பில் உயர்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை தக்க வைப்பதோடு, விரைவுபடுத்தவும் தமிழகம்உறுதி பூண்டுள்ளது. இதனால், பொருளாதார வளம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்ற இரட்டை பலன்களை அடைய முடியும்.

ஐ.டி. உள்கட்டமைப்பு சேவைகள் வழங்குவது, மாநில குடும்பதரவுத் தளம், பிளாக் செயின், இ-அலுவலகம் மூலம் ‘ஸ்மார்ட்’ நிறுவனத்தை நிறுவுவதன் வாயிலாக சேவைகளை மேம்படுத்த இயலும் என்பதால் தமிழக அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலம் குடிமக்கள் விரைவில் காகிதமில்லா, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சேவைகளைப் பெற முடியும்.

குற்றச் சம்பவங்கள், வதந்திகள்: இளைய தலைமுறையினர் தங்கள் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமேதவிர, அதற்கு அடிமையாகிவிடக் கூடாது. தொழில்நுட்ப உதவியுடன்மோசடி செய்யும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. வதந்திகளைப் பரப்பி சட்டம் - ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் இதை பயன்படுத்துகின்றன. ஆபாசவலைதளங்கள் பெருகி வருகின்றன. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தினமும் மனித உயிர்களைப் பலி வாங்கி வருகிறது.

எனவே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை இன்றைய இளைய தலைமுறையினர் சரியாக பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின்முன்னிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டு கழகம் - தமிழ்நாடு தகவல், தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் இடையே வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்மூலம், ஐ.டி., அதுசார்ந்த சேவைகள், வங்கி, நிதி, காப்பீடு சேவை, சில்லறை வணிகம், தொலைதொடர்பு துறையுடன் சம்பந்தப்பட்ட திறன்கள் குறித்து ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் 6 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதேபோல, மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சி மையம் - தமிழ்நாடு தகவல், தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் இடையே வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டம், ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்மூலம், ஆட்டோமேஷன், மெகட்ரானிக்ஸ், மோஷன் கன்ட்ரோல், ரோபாட்டிக்ஸ், இயந்திரக் கருவிகள்உள்ளிட்ட ‘தொழில் 4.0’ தொழில்நுட்பங்களில் திறமையாளர்கள் உருவாக்கப்பட உள்ளனர்.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநிலதிட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் குமரகுருபரன், தகவல் தொழில்நுட்பவியல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பாலச்சந்திரன், ஏஐசிடிஇ தலைவர் சீதாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x