Published : 15 Mar 2023 06:45 AM
Last Updated : 15 Mar 2023 06:45 AM

பயண கட்டணம் அதிகரிக்கும் மின்சார பேருந்து திட்டத்தை கைவிட வேண்டும்: அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்

சென்னை: மின்சார பேருந்து திட்டத்தால் பயணக் கட்டணம் அதிகரிக்கும், எனவே தமிழக அரசு அதை கைவிட வேண்டுமென அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் மார்ச் 10, 11, 12 ஆகிய நாட்களில் சென்னையில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பிரச்சார இயக்கத்தின் இறுதியாக சிஐடியு சார்பில் கோரிக்கை மாநாடு சென்னை பல்லவன் சாலையில் நேற்று நடந்தது. சம்மேளனத்தின் உதவி தலைவர் ஆர்.துரை தலைமையில் நடந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் முன்னிலை வகித்தார்.

விரிவாக்கம் செய்ய வேண்டும்: மாநாடு குறித்து அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுத்துறை போக்குவரத்தை அரசு பாதுகாத்து விரிவாக்கவும், சிறப்பாக செயல்படவும் வைக்க வேண்டும். இதைவிடுத்து இயக்கப்படும் பேருந்துகளை குறைத்து, தனியாருக்கு விடலாமா என்று யோசிக்க கூடாது.

குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் தனியாருக்கே இடமில்லை என அறிவித்திருக்கிறார். ஆனால் இதற்காக டெண்டர் விட்டிருப்பது, புதிதாக பணிநியமனங்கள் செய்யாமல் இருப்பது, சென்னை போன்ற இடங்களில் 900 பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பது உள்ளிட்டவற்றால், தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லைஎன்று கூறுவதை நம்பமுடியவில்லை.

முதல்வர் தலையிட வேண்டும்: எனவே, போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும். பணியில் உள்ளவர்களுடைய ரூ.10 ஆயிரம் கோடியை அரசு எடுத்துசெலவு செய்துவிட்டது. அதைதிருப்பி தரவேண்டும். போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படக்கூடிய இழப்பு அரசாங்கத்துடையது. இதில் வரவுக்கும், செலவுக்கும் இடையே உள்ள இடைவெளியை அரசாங்கம் தான் நிரப்ப வேண்டும்.

அதேபோல் மின்சார பேருந்துகள், பயணக் கட்டணத்தைதான் அதிகப்படுத்தும். இதனால் மாணவர்களுக்கு, பெண்களுக்கு இருக்கக்கூடிய சலுகைகள் பறிக்கப்படும். வருமானமற்ற வழித்தடங்களில் பேருந்து என்ற வாய்ப்பை தமிழக மக்கள் இழப்பார்கள். இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தமிழக அரசு மின்சாரபேருந்து திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், துணை பொதுச்செயலாளர் வி.தயானந்தம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பொதுச்செயலாளர் கே.கர்சன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x