Published : 14 Mar 2023 07:11 PM
Last Updated : 14 Mar 2023 07:11 PM

முதல்வர் வாக்குறுதியின்படி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக வணிகர் சங்க தலைவர் கோரிக்கை

செய்தியாளர் சந்திப்பில் விக்கிரம ராஜா

கும்பகோணம்: முதல்வர் வாக்குறுதி அளித்தது போல் கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

கும்பகோணத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாடு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”ஈரோட்டில் வரும் மே 5-ம் தேதி நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில், மத்திய, மாநில அரசுகள், சாமானிய மக்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஜிஎஸ்டியின் வணிகவரித்துறை அதிகாரிகள், கடந்தாண்டுகளை கணக்கிட்டு பல்வேறு வியாபாரிகளுக்கு வட்டியுடன் வரி செலுத்த நோட்டீஸ் வழங்கி வருவது குறித்து, அந்தத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அதிலுள்ள இடர்பாடுகளை நீக்குவது குறித்து தெரிவிக்கவுள்ளோம்.

இதேபோல் வாட் வரியில் வரவுள்ள சமானத்திட்ட அறிக்கை மூலம் பல ஆயிரக்கணக்கான வணிகர்களின் நிலுவையிலுள்ள வழக்குகள் தீர்வு காணும் சூழல் உருவாக்கப்படும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களைப் பதுக்கி வைக்கின்றன. இதற்கு அரசு துணை போகிறதோ என்கிற அச்சம் வியாபாரிகளுக்கு எழுகிறது. ஆனால், எந்தப் பொருளுக்கும் வியாபாரிகளால் விலையேற்றம் செய்யப்படுவதில்லை.

அரசின் செயல்பாடுகளால்தான் தற்போது சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் மற்ற அனைத்து பொருட்களும் விலை உயரக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. பிரதமர் மோடி ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே வரி என்பதை சூழுரைத்து வருகிறார். ஒரே வரி என்பதை 4 கட்டங்களாக பிரிப்பதைத் தமிழ்நாடு வணிகர்சங்க பேரமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. வரும் ஏப்ரல் 13-ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தின் போது, மத்திய நிதியமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வியாபாரிகளின் இடர்பாடுகள் குறித்து தெரிவிக்கவுள்ளோம்.

தஞ்சாவூர்-விக்கிரவாண்டி 4 வழிச் சாலை அமைக்கும் பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முழுவதுமாக முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக முதல்வரிடம் வலியுறுத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார். அவருடன் மாவட்டத் தலைவர் சி,மகேந்திரன், மண்டலத் தலைவர் எல்.செந்தில்நாதன், செயலாளர் வி.சத்தியநாராயணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x