Published : 14 Mar 2023 04:29 PM
Last Updated : 14 Mar 2023 04:29 PM
சென்னை: “பிளஸ் 2 தமிழ்ப் பாடத் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சி அளிக்கிறது: கலந்தாய்வு மூலம் அச்சத்தைப் போக்கி தேர்வு எழுதச் செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறை. இது அதிர்ச்சியளிக்கிறது.
கரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாதது, தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால் ஏற்பட்ட அச்சம் ஆகியவை தான் பெரும்பான்மையான 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்கு காரணம் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும் இந்த மாணவர்கள் எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழக அரசின் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் மொழிப் பாடத்தாள் தேர்வை எழுதாத மாணவர்களின் பட்டியலை வட்ட அளவில் தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT