Published : 14 Mar 2023 05:37 PM
Last Updated : 14 Mar 2023 05:37 PM
மதுரை; ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிப்பு வெளியான நாள் முதல் மதுரை தோப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கும் நிலையில், இம்மருத்துவமனையை எதிர்பார்த்து காத்திருக்கும் தென் மாவட்ட மக்கள் கட்டுமானப் பணி தொடங்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. இந்த மருத்துமனை மதுரை தோப்பூரில் அமைவதாக 2018-ம் ஆண்டு அறிவித்தபோது தென் மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த மருத்துவமனை திட்டத்திற்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி பிரதமர் மோடியே நேரடியாக வந்து தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதனால், மருத்துவமனை கட்டுமானப் பணி துரிதமாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே கட்டுமானப் பணிக்காக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டது. மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு இடமும் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.21.20 கோடி நிதி ஒதுக்கியது. ‘எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம் பெங்களூரு - கன்னியாகுமரி என்எச்7 நான்கு வழிச்சாலையில் இருந்து சுமார் 3.5 கி.மீ., தொலைவில் உள்ளது. அதனால், என்எச்-7 சாலையையும், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள இடத்தையும் இணைக்கும் வகையில் பிரமாண்ட நான்கு வழிச்சாலையும், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து திருமங்கலம் செல்லும் கரடிக்கல் சாலை வரை 6 கிலோ மீட்டர் சாலை இரு வழிச்சாலையாகவும் போடப்பட்டது. இந்த சாலைகள் அமைத்து 3 ஆண்டாகிவிட்டது. ஆனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணி மட்டும் இன்னும் தோப்பூரில் தொடங்கப்படவில்லை.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிப்பு வெளியான நாள் முதல் மதுரை தோப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறக்கிறது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை விளம்பரப்படுத்தி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தோப்பூரை சுற்றி நிலங்களை வாங்கிப்போட்டு வீட்டுமனைகளை விற்பனை செய்கின்றனர்.
மருத்துவமனை அமையும் சாலையில் பிரமாண்ட நான்கு வழிச்சாலைகள், இரு வழிச்சாலைகள் அமைத்தும் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இதுவரை ஏற்படவில்லை. இப்பகுதியில் கிராமங்களே அதிகளவு உள்ளதால் வாகனப் போக்குவரத்தும் பெரியளவிற்கு இல்லை. அதனால், ‘எய்ம்ஸ்’க்காக போட்ட பிரமாண்ட நான்கு வழிச் சாலை வெறிச்சோடியே காணப்படுகிறது. ஆனால், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நடமாட்டம் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்கள் மக்களை அழைத்து வருவதும், நிலங்களை விற்க பேச்சுவார்த்தை நடத்துவதுமாக உள்ளனர்.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிப்பதற்கு முன், நான்கு வழிச்சாலைக்கு மிக அருகிலே இருந்தும் தோப்பூரில் ஒரு சென்ட் நிலம் ரூ.30 முதல் அதிகப்பட்சம் 80 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், தற்போது ரூ.5 லட்சம் வரை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. "கட்டுமானப்பணி விரைவில் தொடங்கிவிடும், முந்துங்கள்" என்று கூறியே விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில், ‘எய்ம்ஸ்’ அறிவித்ததால் சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என எதிர்பார்த்த தென் மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT