Published : 14 Mar 2023 06:15 AM
Last Updated : 14 Mar 2023 06:15 AM

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தியை ரிலே நீச்சலில் 7 பேர் நீந்தி கடந்து சாதனை

பாக் ஜலசந்தி கடலை நீந்திவந்த நீச்சல் வீராங்கனைகள்.

ராமேசுவரம்: இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங் களில் பெங்களூருவைச் சேர்ந்த 7 பேர் ரிலே நீச்சல் முறையில் கடந்து சாதனை படைத்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பிரஷாந்த் ராஜண்ணா(44), ராஜசேகர் துபரஹள்ளி(52), ஜெய்பிரகாஷ் முனியல் பாய் (55), அஜத் அஞ்சனப்பா(40), சுமா ராவ் (53), சிவரஞ்சினி கிருஷ்ணமூர்த்தி (40), மஞ்சரி சாவ்ச்சாரியா(45) ஆகியோர், அங்குள்ள நீச்சல் அறக்கட்டளை ஒன்றில் பயிற்சி பெற்றனர்.

நீச்சலில் சாதனை புரிய வேண்டும் எனத் திட்டமிட்ட இந்த 7 பேரும், இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 30 கி.மீ. தூர பாக் ஜலசந்தியை நீந்தி கடக்கத் திட்டமிட்டனர். இதற்காக 7 பேரும் இந்திய வெளியுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாது காப்புத் துறை அமைச்சகத்தில் அனுமதி பெற்றனர்.

இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 2 படகுகளில், இந்த 7 பேரும், நீச்சல் பயிற்சியாளர் சுஜேத்தா தேப் பர்மன், மீனவர்கள் உட்பட 16 பேருடன் தலைமன்னார் சென்றனர்.

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு நீந்தி வந்த பெங்களூருவை சேர்ந்த
7 பேரை வரவேற்ற சுங்கத்துறை அலுவலர்கள் மற்றும் மெரைன் போலீஸார்.

தலைமன்னாரிலிருந்து ரிலே நீச்சல் முறையில் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீந்தத் தொடங்கிய 7 பேரும் 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி பிற்பகல் 3.45 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்தனர். அவர்களை சுங்கத் துறை, மெரைன் போலீஸார், சுற் றுலாப் பயணிகள் வரவேற்றனர்.

இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையேயான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 28.3.2019-ல் தேனியைச் சேர்ந்த ஆர்.ஜெய்ஜஸ்வந்த் தனது 10 வயதிலும், 12.4.1994-ல் 12 வயதில் குற்றாலீசுவரனும், 20.3.2022-ல் மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் (13) என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியும், 29.3.2022-ல் தேனியைச் சேர்ந்த சிநேகன் (14), 19.4.2022-ல் நவி மும்பையைச் சேர்ந்த அன்சுமான்(16) ஆகியோர் குறைந்த வயதுகளில் நீந்திக் கடந்துள்ளது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x