Last Updated : 14 Mar, 2023 04:03 PM

 

Published : 14 Mar 2023 04:03 PM
Last Updated : 14 Mar 2023 04:03 PM

ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனம் இருப்பது கண்டுபிடிப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவைகள் இனம் இருப்பது தெரிய வந்திருப்பதாக வன உயிரின காப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறியதாவது: "கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 சதுர கி.மீ ஆகும். இதில் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 504.33 ச.கி.மீ மற்றும் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 686.40 ச.கி.மீ. இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும், 172 வகையான வண்ணத்து பூச்சிகளும் உள்ளன.

அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள், எறும்பு திண்ணிகள், சிறுத்தைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகுகள் போன்றவையும் காணப்படுகின்றன. நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் மூலம், 2 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக காப்புக் காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப் பகுதிகளிலும், 2ம் கட்டமாக காப்புக்காடு பகுதிகளிலும் நடத்தப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டம் முடிந்த பிறகு, இதே போன்று பல்வேறு துறைகளில் பணியாற்றும் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, 2 ம் கட்டமாக கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் ஓசூர் கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் ஓசூர் வனக்கோட்டம், காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் காவேரி தெற்கு வனஉயிரின சரணாலய பகுதிகளிலும், காவேரி, சின்னாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ள உரிகம் மற்றும் அஞ்செட்டி வனச்சரகங்களில் 24 பீட்களில் உள்ள காப்புக்காடுகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 60-க்கும் மேற்பட்ட தன்னாவர்லர்கள் பங்கேற்றனர். இந்த 2ம் கட்ட கணக்கெடுப்பின் போது, கருந்தலை மாம்பழக் குருவி, நீலத் தொண்டை ஈப்பிடிப்பான், பருந்து, செந்தலை பஞ்சுருட்டான், மீன் கொத்தி, கள்ளிப் புறா, கொண்டலாத்தி குருவி, பெரிய பச்சைப் புறா, காட்டுப் பக்கி குருவி, அரசவால் ஈப்பிடிப்பான், ஷஜர்டன் பச்சைச் சிட்டு, சிறிய மீன்பிடி கழுகு, பச்சைக்கிளி, ஓணான் கொத்தி கழுகு, சிறிய மின் சிட்டு, தடித்த அலகு மீன்கொத்தி, வரி வாலாட்டி குருவி, பச்சை குக்குருவான், பச்சை பஞ்சுருட்டான், ஊதா தேன்சிட்டு, பச்சைச் சிட்டு, கதிர் குருவி உள்ளிட்ட 218 பறவை இனங்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது'' இவவாறு வன உயிரின காப்பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x