Published : 14 Mar 2023 03:44 PM
Last Updated : 14 Mar 2023 03:44 PM

சென்னையில் வெள்ள பாதிப்பு தடுப்புக்கான திட்டங்கள் - இறுதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது திருப்புகழ் குழு 

அறிக்கையை முதல்வரிடம் அளித்த திருப்புகழ் குழு

சென்னை: சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்திட்டவர் திருப்புகழ் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக திருப்புகழ் நியமிக்கப்பட்டார். அக்குழு சென்னை பெருநகர பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கைகளை அளித்தது.

இதன் தொடர்ச்சியாக, இக்குழுவின் இறுதி அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (பிப்.14) தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது. ஆலோசனைக் குழுவின் தலைவர் திருப்புகழ் இறுதி அறிக்கையை அளித்து, அறிக்கையின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இதையடுத்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "ஆட்சிக்கு வந்தவுடன் கரோனாவை சமாளிக்க அரசு முழு வேகத்தில் செயல்பட்டது. அதன்பிறகு, உடனே பெருமழை காரணமாக அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதனை எதிர்கொண்டவுடன், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. நானும், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து மேற்பார்வை செய்து பணிகளை 80 சதவீதம் முடித்ததால் கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் மிகப்பெரிய நல்ல பெயர் அரசுக்கு கிடைத்தது.

இந்த நற்பெயருக்கு முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் குழுவினரின் செயல்பாடுகள். இதற்காக முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண உழைத்திட்ட திருப்புகழுக்கும், குழுவின் உறுப்பினர்களான ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதிநாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர் என்ற முறையில் நான் அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். நம்முடைய அரசு என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. தொடர்ந்து அரசுடன் நீங்கள் இது தொடர்பாக எந்த நேரத்திலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x