Published : 14 Mar 2023 06:00 AM
Last Updated : 14 Mar 2023 06:00 AM

முன்னோரின் வாழ்க்கை முறைகளை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில், ‘கி.ரா. நூறு - தொகுதி -1’ நூலை முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். உடன் பத்திரிகையாளர் மணா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஆர்எம்கே. கல்வி குழுமங்களின் நிறுவனர் ஆர்.எஸ்.முனிரத்தினம், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி தலைவர் குமார் ராஜேந்திரன், நூலாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) நூற்றாண்டு விழா மற்றும்வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்து எழுதிய ‘கி.ரா. நூறு’ கட்டுரை தொகுப்பு நூல்கள் வெளியீட்டுவிழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது.

இதில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நூல்களை வெளியிட்டார். விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

தமிழ் இலக்கியத்துக்கு மாபெரும் பங்களிப்பு செய்த கி.ரா., ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். அவரது சிறந்த படைப்பான‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

நமது முன்னோர்கள் சிறந்த நெறிகளை பின்பற்றி வாழ்ந்தனர். அந்த கால திரைப்படங்கள் நம் கலாச்சாரம், பாரம்பரியத்தை பறைசாற்றின. இப்போதைய திரைப்படங்களில் ஆபாசம்,வன்முறையே அதிகம் காணப்படுகிறது.

இதனால் இளம் தலைமுறையினருக்கு பதற்றமும், அதனால் கவனச் சிதறல்களும் ஏற்படுகின்றன. நினைத்ததை சாதிக்க முடிவதில்லை.எனவே, இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை கைவிட வேண்டும். சிறந்த நெறிமுறைகளுடன் நம் தாத்தா, பாட்டி வாழ்ந்த வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.

பெற்றோர் தங்கள் குழந்தை களுக்கு அறநெறி கதைகளை கூறியும், நம் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டின் பெருமைகளை கூறியும் அவர்களை வளர்க்க வேண்டும். தற்போதைய சூழலில், மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் நூற்றாண்டை கொண்டாடுவது பொருத்தமாக, பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

கி.ரா.வின் பேரன் திலீபனுக்கு அவர்பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.விழாவில் தமிழக பாஜக துணைத்தலைவர் எம்.சக்ரவர்த்தி ‘தினமணி’நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x