Published : 14 Mar 2023 06:14 AM
Last Updated : 14 Mar 2023 06:14 AM
சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகைவழங்குதல் உள்ளிட்ட முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் நேற்று அனைத்து துறை செயலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோ சனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 20-ம் தேதி, 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல்செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமைத் திட்டங்கள், விரைவில் அறிவிக்கப்படும் மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகைதிட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர்கள் (நிலை-1) உதயசந்திரன், நா.முருகானந்தம் (நிதி), சிவ்தாஸ் மீனா (நகராட்சி நிர்வாகம்) முகமது நசிமுதீன் (தொழிலாளர் நலன்), சுப்ரியா சாஹு (வனம்) அமுதா (ஊரக வளர்ச்சி), வருவாய் நிர்வாகஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை, புதிய திட்ட அறிவிப்புகள் தொடர்பாக அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். குறிப்பாக, எரிசக்தி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, பொதுப்பணி, தொழில், சிறப்பு முயற்சிகள், கைத்தறி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை, நிதித் தேவை குறித்துஆய்வு செய்யப்பட்டது.
மேலும், விரைவில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 6 திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர்கேட்டறிந்து, திட்ட செயல்பாட்டுக்கான ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ‘ஆட்சியும் வளர்ச்சியும் தமிழ்நாட்டுக்கான பசுமை அச்சு’என்ற தலைப்பில், மின் துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் செந்தில்பாலாஜி, பொருளாதார ஆலோசனைக் குழுவின் மின் துறை குழுத் தலைவர் அரவிந்த் சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், மின்துறை தலைவர்ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மின் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, நஷ்டத்தைக் குறைப்பதுஉள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாத வருவாய் ரூ.15,000: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியாக உள்ள நிலையில், பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வருவாய், உணவுத் துறைகளிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழும், மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் கீழ் வருவாய் உள்ள குடும்பத் தலைவிக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ்பயன்பெறும் பெண்ணின் தாயாராகஇருந்தாலும், பயனாளியாக சேர்க்கப்படலாம் என்றும், அதேநேரம் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட வேறு உதவித்தொகை பெறுவோருக்கு உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. வயது, வருவாய் மற்றும் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்த அறிவிப்பு, நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT