Published : 14 Mar 2023 06:10 AM
Last Updated : 14 Mar 2023 06:10 AM

கோவை | பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விநியோக நிலையம் மூலம் இலவச ‘ஷாப்பிங்’ அனுபவத்தை பெறும் ஏழைகள்

கோவை ஆத்துப்பொள்ளாச்சியில் அமைக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விநியோக நிலையத்தில் ஆடைகளை எடுத்துச்சென்ற பெண்கள், குழந்தைகள்.

கோவை: இருக்க இடம், உடுக்க உடை என்பது அனைவருக்கும் அவசியம். அவ்வாறு கோவையில் உடை தேவைப்படும் ஏழை மக்களுக்கு இலவச ‘ஷாப்பிங்’ அனுபவத்தை, பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விநியோக நிலையம் மூலம் அளித்து வருகின்றனர் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வ அமைப்பினர்.

இதற்காக நல்ல நிலையில் உள்ள வேட்டி, சட்டைகள், டி-சர்ட்டுகள், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், முதியவர்களுக்கான பழைய துணிகளை தன்னார்வலர்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பெறுகின்றனர். பெரும்பாலும் யார் துணிகளை அளிக்கிறார்களோ அவர்களே அந்த துணிகளை துவைத்து, தேய்த்து, மடித்து இவர்களிடம் அளிக்கின்றனர்.

அவற்றை ஒருமுறை சரிபார்த்து, எப்படி புதிய துணிகள் கடைகளில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்படுமோ அப்படி, விநியோக நிலையத்தில் அடுக்கி வைக்கின்றனர். அங்கு வரும் ஏழை மக்கள், தங்களுக்கு தேவையான அளவுள்ள உடைகளை எடுத்துச்செல்லலாம்.

ஒருவர் தலா 2 உடைகளை இலவசமாக எடுத்துச்செல்லலாம். ஒவ்வொரு இடத்திலும் சுமார் 1,500 முதல் 2 ஆயிரம் ஆடைகள் வைக்கப்படுகின்றன. இதுவரை, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பெரியபோது, ஆத்துப்பொள்ளாச்சி ஆகிய இடங்களில் விநியோக நிலையங்கள் அமைக்கப்பட்டதில் மொத்தம் 688 பேர், 1,308 துணிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள், முதியோர் ஆவர்.

இதுதொடர்பாக ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் எம்.கணேஷ் கூறியதாவது: பெரும்பாலும் அந்தந்த கிராமத்தில் உள்ள சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்களில் விநியோக நிலையத்தை அமைக்கிறோம்.

சனி, ஞாயிறு முகாம்: அவ்வாறு அமைப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே சம்மந்தப்பட்ட ஊராட்சியின் தலைவருக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யுமாறு தெரிவிக்கிறோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமைக்கப்படும் இந்த மையங்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் திறந்திருக்கும்.

தற்போது ஆனைமலை தாலுகாவில் கவனம் செலுத்தி வருகிறோம். இன்றும், நாளையும் அர்த்தநாரி பாளையத்தில் விநியோக நிலையம், செயல்பட உள்ளது. திவான்சாபுதூரில் வரும் 18, 19-ம் தேதிகளில் விநியோக மையம் அமைக்கப்பட உள்ளது.

இதேபோல, ஒவ்வொரு தாலுகா வாரியாக மாவட்டம் முழுவதும் விநியோக நிலையம் அமைத்து ஏழைகளுக்கு துணிகளை வழங்க உள்ளோம். துணிகளை வீட்டுக்கு எடுத்துச்சென்ற பிறகு, அளவு போதவில்லை என்றாலோ, பிடிக்கவில்லை என்றாலோ மீண்டும் அதே இடத்தில் அளித்து மாற்றிக்கொள்ளலாம்.

விற்பனை நிலையங்களில் துணிகளை அடுக்கிவைப்பது, எடுத்துச்செல்வது போன்ற பணிகளில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். துணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல டிரக் டாக்ஸி நிறுவனத்தினர் உதவி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x