Published : 14 Mar 2023 07:44 AM
Last Updated : 14 Mar 2023 07:44 AM
சென்னை: அதானியின் பங்குச் சந்தை ஊழலுக்கு மத்திய பாஜக அரசும்,பிரதமர் மோடியும் துணை போவதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: கர்நாடக மாநிலத்தில் நேற்றுஒரு சாலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ``நான் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால்,காங்கிரஸ் கட்சி எனக்கு கல்லறை தோண்டுகிறது.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜனநாயகத்தை, ராகுல் காந்தி வெளிநாட்டில் தரக்குறைவாகப் பேசிவருகிறார்'' என்று தெரிவித்துள்ளார். இவை இரண்டுமே உண்மைக்குப் புறம்பானவை.
இந்தியாவில் எந்த வளர்ச்சியை பாஜக கொண்டு வந்திருக்கிறது? அதானிதான் வளர்ந்துகொண்டே இருக்கிறார். இந்தியா வீழ்ந்து கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, தற்போது 2 சதவீதம் குறைந்துள்ளது.
2014-ல் பாஜக பொறுப்பேற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70, காஸ் சிலிண்டர் ரூ.400-ஆகஇருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் ரூ.100-ஐக் கடந்து விட்டது. காஸ் சிலிண்டர் ரூ.1,118-க்கு விற்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் பெற்றுத் தருவதாக பிரதமர் கூறினார். ஆனால், விளை பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
எந்த துறையிலும் வளர்ச்சியைகொடுக்காமல், பிரதமர் தவறானத் தகவல்களைக் கூறுவது சட்டப்படி குற்றம். பிரதமர் மோடி பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலை நாடுகளில் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை இருந்தபோது, இந்தியாவில் பல கட்சி ஆட்சிமுறையைக் கொண்டு வந்தார் நேரு. அதற்கு பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இதுதான் ராகுல்காந்தியின் கவலை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.
ஆர்ப்பாரட்டத்தில், காங்கிரஸ் தேசிய செயலர் சிரிவெல்ல பிரசாத், மாநிலத் துணைத் தவைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, முருகானந்தம், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை, மாவட்டத்தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT