Published : 14 Mar 2023 07:39 AM
Last Updated : 14 Mar 2023 07:39 AM

தீக்காயமடைந்த சிறுவனுக்கு 6 பிளாஸ்டிக் சர்ஜரி; 2 ஆண்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்: டாக்டர்களுக்கு அமைச்சர் பாராட்டு

தீக்காயமடைந்து சிறப்பு சிகிச்சை மூலம் குணமடைந்த சூரியகுமாரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் குழுவினர்.

சென்னை: தீக்காயம் ஏற்பட்ட சிறுவன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 ஆண்டுகள் சிகிச்சை, 6 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளான். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக் குழுவினரைப் பாராட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன், சத்யஜோதி தம்பதியின் 2-வது மகன் சூரியகுமார் (12). கடந்த 2021-ம் ஆண்டு பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தபோது, சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, நெருப்பில் தவறுதலாக கிருமிநாசினி கோப்பை விழுந்து வெடித்துச் சிதறியதில் சிறுவனின் உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, சேலம் குமாரமங்கலம் அரசுமருத்துவமனையில் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவீடு திரும்பிய சிறுவனுக்கு வலிப்புஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவனுக்குச் சிறுநீரக செயலிழப்பு, ரத்தக்கொதிப்பு மற்றும் வலிப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதால் சிறுவன் சென்னையில் தங்குவதற்கு வசதியாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியை வழங்கினார்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறையில் ஓராண்டாகத் தொடர் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சிறுவனுக்கு கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் காது, கைகளில் 6அறுவை சிகிச்சைகளை பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் தேவி தலைமையில் மருத்துவர்கள் மகாதேவன், வெள்ளியங்கிரி, ரஷிதா பேகம், செந்தில், செவிலியர்கள் சாந்தி, சத்யா, பரிமளா, நபிஷா ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்கொண்டனர்.

இதற்கு முன்பு, ஓராண்டாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இயங்கும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சிறுவனுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

உடல் ஊனமுற்ற தன்மை சரி செய்யப்பட்டு, தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு உடல்நலம் குணமடைந்த சிறுவனை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவினரைப் பாராட்டினார். மருத்துவமனை டீன்தேரணிராஜன், பிளாஸ்டிக் சர்ஜரிநிபுணர் தர், சிறுவனின் பெற்றோர்உடன் இருந்தனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மருத்துவர் தேவி கூறுகையில், ``2 ஆண்டுகளில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் சிறுவனுக்கு 6 பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாகச் செய்யப்பட்டுள்ள இந்த நீண்டகால சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள பல லட்சங்கள் செலவாகியிருக்கும். சிறுவன் நலமுடன் வீடு திரும்புகிறான்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x