Published : 14 Mar 2023 12:54 AM
Last Updated : 14 Mar 2023 12:54 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு விபத்து அபாயம் நிலவுகிறது.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் ராமகிருஷ்ணாபுரம் முதல் மடவார் வளாகம் வரை மிகுந்த போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அதிக வளைவுகள், குறுகலான சாலை உள்ள இப்பகுதியில் வளைவுகள் மற்றும் சாலை சந்திப்பு பகுதியில் சாலையோரம் பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து அபாயம் நிலவுகிறது.
அதிலும் பண்டிகை காலங்கள், கோயில் திருவிழாக்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் விழா, தனியார் நிறுவனங்களின் விளம்பரம் உள்ளிட்டவற்றிற்காக சாலையின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி சுவாமி ஊர்வலம் வரும் என்பதாலும், தேரோட்ட விழா நடைபெற இருப்பதாலும் சாலையோரம் இருந்த மரக்கிளைகள் மற்றும் மின் ஒயர், கேபிள் ஒயர்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT