Published : 13 Mar 2023 01:49 PM
Last Updated : 13 Mar 2023 01:49 PM

குறவன் - குறத்தி ஆட்டத்திற்குத் தடை - தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு தலைமை செயலகம்

சென்னை: திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவில், "ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எந்த ஒரு சமூகமும் குறிப்பாக பழங்குடியின மக்கள் இழிவுபடுத்தப்படும் விதமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும், குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது.

ஆடல் பாடல் நிகழ்ச்சி குறவர் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் பிரிவில் சிறப்பு பிரிவை ஏற்படுத்தி குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை தடுக்க வேண்டும்; குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக ஆடல், பாடல் நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து, சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில் இடம்பெற்றுள்ள குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது.

மேலும், கரகாட்டம் என்ற பெயரிலும் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளில், எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. குறவன், குறத்தி ஆட்டம் எந்த ஒரு கலை நிகழ்ச்சியிலும் நடைபெறவில்லை என்பதை கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் உறுதிப்படுத்த வேண்டும்' என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x