Published : 13 Mar 2023 04:32 AM
Last Updated : 13 Mar 2023 04:32 AM
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு அறைக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்.3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். 23,747 தனித்தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறைகைதிகளும் இதில் அடங்குவர்.
பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 46,870 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்துவசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்வது, விடைத்தாளை மாற்றிக் கொள்வது ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள்,புகார்களை தெரிவிக்க, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
நாளை முதல் பிளஸ் 1 தேர்வு: பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 14) தொடங்கி ஏப்.5-ம் தேதி வரைநடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 3,224 மையங்களில் 7.93 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் எச்3என்2 வைரஸ், கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மாணவர்கள் எளிதில் சோர்வடையக்கூடும். எனவே, காலை உணவை தவிர்க்காமல், எளிய வகை உணவை சாப்பிட்டு தேர்வுக்கு செல்வதை பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT