Last Updated : 20 Sep, 2017 07:56 AM

 

Published : 20 Sep 2017 07:56 AM
Last Updated : 20 Sep 2017 07:56 AM

எல்ஐசி பாலிசிகள் மீதான கடன்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் என அழைக்கப்படும் எல்ஐசி நிறுவனம் ரூ.5 கோடி மூலதனத்துடன் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இதன் சொத்து மதிப்பு ரூ.25 லட்சம் கோடியாக உள்ளது. ரூ.23.23 லட்சம் கோடி அளவுக்கு ஆயுள் காப்பீட்டு நிதியை நிர்வகித்து வருகிறது. 29 கோடிக்கும் அதிகமான பாலிசிகளை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அவ்வப்போது புதிய பாலிசிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அத்துடன் வாடிக்கையாளர் சேவையிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தற்போது பாலிசிகள் மீது கடன் பெறுபவர்கள் அதனை ஆன்லைன் மூலம் திருப்பி செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, எல்ஐசி நிறுவன அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பாலிசிகள் மீது கடன் பெற்றவர்கள் அதற்கான கடன் தொகையை ஆன்லைன் மூலம் திரும்ப செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பாலிசிதாரர்கள் www.licindia.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு பயன்பாட்டாளர் பெயர் (யூசர் நேம்), கடவுச் சொல் (பாஸ்வேர்டு) வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி பாலிசிதாரர்கள் தங்களது பாலிசிக் கடனுக்கான வட்டி மற்றும் அசலை செலுத்தலாம்.

அத்துடன், ஆன்லைன் மூலம் பாலிசிகள் மீது கடன் பெறும் வசதியையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெற்ற கடன் மீது கூடுதல் கடன் பெறவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பாலிசிதாரர்கள் ஒவ்வொரு முறையும் கடன் அசல் தொகையை செலுத்த அவர்கள் கடன் பெற்ற எல்ஐசி கிளை அலுவலகத்துக் குச் செல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x