Published : 21 Sep 2017 03:54 PM
Last Updated : 21 Sep 2017 03:54 PM
ஜெயலலிதா மறைந்து 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இன்றைய நாள் அவருக்கு மிக முக்கியமான நாளாகும். ஜெயலலிதா முதல்வராக தான் மறைவதற்கு முன் கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி நடந்தது கடந்த ஆண்டு இதே நாளில்தான்.
செப் 21, 2016-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அதற்கு பல மாதங்கள் முன்பே தனது உடல் நிலை காரணமாக செயல்படாத நிலை வந்த போதும் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போதெல்லாம் உடல் சோர்வை மறைத்துக்கொண்டு புன்னகை தவழும் முகத்துடன் தொண்டர்களை நோக்கி கையசைத்து வாழ்த்துவார்.
கடைசி நாளன்று தனது வாகனத்தை விட்டு மெதுவாக இறங்கி தனது அறைக்குச் சென்றவர் பின்னர் போக்குவரத்து பேருந்துகளை தொடங்கி வைக்கும் வகையில் பச்சைக்கொடியை மெதுவாக அசைத்தார். அன்று அவரது நிலையைப் பார்த்த பலரும் இவ்வளவு சோர்வாக இருக்கிறாரே என்று நினைத்தனர்.
தலைமைச் செயலகத்திலிருந்து அன்று கிளம்பிய முதல்வரின் வாகனம் வணங்கி நின்ற அமைச்சர்கள் அனைவருடன் சிரித்து விடைபெறும் போது யாரும் நினைக்கவில்லை இன்றுதான் இறுதி வழியனுப்பு விழா என்று.
மறுநாள் செப்.22 இரவு அந்த செய்தியை அவரவர் ரகசியமாக பரிமாறிக் கொண்டனர். அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் வீடு திரும்புவார் என 75 நாட்கள் காத்திருந்த தொண்டர்கள் அவர் திரும்பி வர முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டார் என்ற செய்தியைத்தான் கேட்க முடிந்தது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் அவர் இல்லாத வெற்றிடத்தை முகத்திலறைந்தார் போல் நமக்கு உணர்த்துகிறது. இன்று பதவிக்காக எதையும் துறக்க தயாராக இருக்கும் நபர்களையா ஜெயலலிதா அன்று வழி நடத்திச் சென்றார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழாமல் இல்லை.
இந்தியா முழுவதும் அடித்த மோடி அலையில் அனைவரும் ஆட்டம் கண்ட போதும், மெகா கூட்டணியை தமிழகத்தில் பாஜக அமைத்த போதும் 'தமிழகத்தில் மோடி அலை அல்ல இந்த லேடி அலைதான் உள்ளது' என்று துணிச்சலாகப் பேசி அதை சாதித்தும் காட்டினார் ஜெயலலிதா.
மாநில உரிமைகள் சார்ந்த விஷயங்களில் விட்டுத்தராத மனப்போக்கு தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு அரணாக இருந்தது. தமிழகத்தின் நலனுக்காக, மாநில உரிமைகள் சார்ந்த விஷயங்களில் பெரிய அரணாக ஜெயலலிதா கடைசி வரை இருந்தார். காவிரி பிரச்சினை முதல் கச்சத்தீவு பிரச்சினை வரை கடுமையாக போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினார்.
கிராமப்புற ஏழை மாணவர்களுக்காக கடைசி வரை நீட் தேர்வை எதிர்த்து நின்றவர் ஜெயலலிதா. நீட் தேர்வு, உணவுப் பாதுகாப்பு சட்டம், உதய் திட்டம், காவிரி நீர் பிரச்சினை அனைத்திலும் மத்திய அரசிடம் உரிமை கேட்டு உறுதியாக நின்றவர். ஜிஎஸ்டி சட்டத்தில் மாநிலத்தின் பங்கு உரிமைக்காகப் போராடினார்.
மாநில உரிமைகள் சார்ந்த விஷயங்களில் எதிர்ப்பு காட்டி தடைக்கல்லாக இருந்தார் ஜெயலலிதா. படிக்கல்லாய் மாறியவர்களால், மாற்றாந்தாயிடம் சிக்கிய பிள்ளைகளாய் மாறிப்போனது தமிழகம்.
அனிதாவைப் பறி கொடுத்த நீட் தேர்வு முதல் தாம் எதிர்த்த அனைத்தும் அசுர வேகத்தில் வந்தபோது அரணாக இருந்தார் ஜெயலலிதா. அவர் இல்லாத தமிழகம் அனைத்துக்கும் சிவப்பு கம்பள அரசாக உள்ளது. அவர் எதிர்த்த திட்டங்களுக்கு வரவேற்பு அளிக்கும் அவரது வழித்தோன்றல்களின் செயல் ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நன்றாக உணர்த்துகிறது.
பொது வாழ்விலிருந்து ஜெயலலிதா பிரியா விடைபெற்ற இந்த நாளில் மாநில அரசின் உரிமை சார்ந்த விஷயங்களும் விடைபெற்று விட்டதை உணர முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT