Published : 28 Feb 2023 06:10 AM
Last Updated : 28 Feb 2023 06:10 AM

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் நடுக்கடலில் கைது

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள்.

நாகப்பட்டினம் / புதுக்கோட்டை / சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, நாகை, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். மேலும், அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ரவி(20), ஆனந்தமணி(44), ராஜா (32), வீரையன் மகன் ரவி(48), மதிபாலன்(36), காத்தலிங்கம்(50), ராமமூர்த்தி(38), அன்பு(32), வேல்மயில்(48), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரகு(38), தினேஷ்(26), சித்திரவேல்(42) ஆகிய 12 பேர், கடந்த 7-ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

வேதாரண்யம் அருகே, கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்தஇலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 12 பேரையும் கைது செய்தனர்.

மேலும், அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 12 மீனவர்களையும், காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடித் தளத்தில்இருந்து 172 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச்சென்றனர். எல்.ஆரோக்கியசாமி (54) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், அவருடன், ஏ.அசோக்(28), ஏ.கருப்பு(22), எஸ்.சக்தி(20) ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 30 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 பேரையும் கைது செய்து, பருத்தித் துறை கடற்படைதளத்துக்கு கொண்டு சென்றனர். விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் விசைப்படகுகளை மீட்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அண்ணாமலை கடிதம்: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, பாஜகமாநிலத் தலைவர் கே.அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளியுறவு அமைச்சகத்துக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், புதுக்கோட்டை, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மீனவர்களுக்குச் சொந்தமான 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், திக தலைவர் வீரமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

ராமதாஸ்: தமிழக மீனவர்கள்பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால்கூட, அவர்களை இலங்கைகடற்படையினர் கைது செய்கின்றனர். இது தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கி.வீரமணி: தமிழக மீனவர்களைக் காப்பாற்றுமாறு மாநிலஅரசு தொடர்ந்து வலியுறுத்தினாலும், மத்திய அரசு இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் உரிமையை மீட்டெடுக்க திக சார்பில் ஏப். 14-ல்ஜெகதாப்பட்டினத்தில் மாநாடு நடத்தப்படும்.

ஜி.கே.வாசன்: இலங்கை அரசுடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x