Published : 06 Sep 2017 09:51 AM
Last Updated : 06 Sep 2017 09:51 AM
144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள காவிரி மகா புஷ்கரம் திருவிழாவுக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசை பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா, புஷ்கரம் திருவிழா ஆகும். இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். அதன்படி, துலா ராசிக்குரிய காவிரி நதியில் செப்.12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை புஷ்கரம் விழா நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா மகா புஷ்கரம் விழாவாக கருதப்படும். அவ்வகையிலும், காவிரியில் வரும் 12-ம் தேதி தொடங்கும் விழா, மகா புஷ்கரம் விழாவாக கொண்டாடப்படுகிறது.
காஞ்சி பீடம் ஏற்பாடு
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரிக்கரையில் இந்த மகா புஷ்கர விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் காஞ்சி காமகோடி பீடம் சார்பில் விழாக் குழு அமைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நீர் பெற கோரிக்கை
இதுகுறித்து காவிரி புஷ்கரம் 2017 அறக்கட்டளைத் தலைவர் சுவாமி ராமானந்த மகராஜ், `தி இந்து’விடம் கூறியது: காவிரி புஷ்கர விழாவை அரசு விழாவாக அறிவித்து, கர்நாடகத்திடம் இருந்து கூடுதலாக தண்ணீரை பெற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து 12 நாட்களுக்கு பக்தர்கள் நீராடும் வகையில் காவிரியில் தண் ணீர் வழங்க வேண்டும். செப்.12-ம் தேதிக்குள் பூம்புகார் வரை தண்ணீர் சென்றடையும் வகையில் மேட் டூர் அணையில் இருந்து போதுமான அளவு தண்ணீரை முன்னதாகவே திறப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
80 அடி நீர்மட்டம் தேவை
மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் 80 அடி நீர்மட்டம் இருந்தால்தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போது 64.55 அடியே உள்ளதால், காவிரி புஷ்கர விழாவுக்கென 10 தினங்களுக்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீரை திறந்து, காவிரி கடலில் கலக்கும் இடமான பூம்புகார் வரை சென்றடைய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT