Published : 13 Mar 2023 03:41 AM
Last Updated : 13 Mar 2023 03:41 AM
மதுரை: போட்டியில் காயமடைந்து எலும்பு உடைந்த ‘ரேக்ளா ரேஸ்’ காளைக்கு மனிதர்களை போல், அரசு கால்நடை மருத்துவர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்துள்ளார். காளையை மருத்துவமனைக்கு அழைத்த வர முடியாததால் காளை உரிமையாளர் வீட்டிற்கே சென்று இந்த சிகிச்சையை கால்நடை மருத்துவர் அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும், காளைகளுக்கும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் கிராமம் ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிலும் தற்போது பிரபலமாக இருக்கிறது. தமிழகத்தில் ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிகள், ஈரோடு, திருப்பூர், கோவை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் அதிகளவு நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளுக்காக அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு கிராமங்களிலும் ஏராளமானோர் ‘ரேக்ளா ரேஸ்’ காளைகள் வளர்க்கிறார்கள். வெளிமாவட்டங்களில் நடக்கும் ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிகளுக்கும் அழைத்து செல்கிறார்கள். இந்த போட்டிகளுக்காக வளர்க்கும் காளைகளை, அவர்கள் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த மாட்டார்கள்.
கடந்த வாரம் அலங்காநல்லூர் முடுவார்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது காளைகளை சிவகங்கையில் நடந்த ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். போட்டியில் முன்னால் சென்ற ரேக்ளா வண்டி திடீரென்று பழுதடைந்து நின்றது. எதிர்பாராதவிதமாக பின்னால் வேகமாக வந்த இவரது ரேக்ளா வண்டி அந்த வண்டி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், இவரது காளை ஒன்று கால் உடைந்து எலும்பு வெளியே வந்தது.
வலியால் துடித்த காளையை முடுவார்பட்டிக்கு வண்டியில் ஏற்றி கொண்டு வந்தனர். தொடர்ந்து காளை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துவர முடியவில்லை. அதனால், மதுரை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மதுரை நடராஜகுமார், திருமங்கலம் கோட்டம் உதவி இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழிகாட்டுதலில் கால்நடை மருத்துவர் மெரில்ராஜ், காளை உரிமையாளர் ரமேஷின் வீட்டிற்கே சென்று காயமடைந்த காளைக்கு சிகிச்சை அளித்தார்.
சாதாரணமாக காளைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் மாவு கட்டுப்போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால், சவ்வு கிழிந்து எலும்பு வெளியே வந்ததால் அந்த எலும்பை மீண்டும் அதே இடத்தில் நிலை நிறுத்த மனிதர்களை போல் இலிசாரோ முறையில் அந்த காளைக்கு மருத்துவர் மெரில்ராஜ் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்தார்.
இதுகுறித்து மருத்துவர் மெரில்ராஜ் கூறுகையில், ‘‘ரேக்ளா ரேஸ் காளைக்கு அதன் கால்கள்தான் அதற்கு அச்சாணிபோல். ஆனால், 12 வயதான அந்த காளைக்கு எலும்பு அடிப்பட்டு வெளியே வந்தது. அதனால், மனிதர்களுக்கு போல் இந்த காளைக்கும் மயக்க ஊசிப்போட்டு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்தேன். மூட்டு விலகாமல் இருக்கவும், அசையாமல் இருக்கவும் பிரேம் ட்ரில் செய்து எலும்பை பொருத்தினேன்.
தற்போது அறுவை சிகிச்சை செய்த காளை நலமாக உள்ளது. தொடர் கண்காணிப்பும், மருந்தும் வழங்கப்படுகிறது. இன்னும் 2 மாதத்தில் காளை பழைய நிலைக்கு வரும். முன்போல் போட்டிகளிலும் பங்கேற்கலாம். மதுரை மாவட்டத்தில் இந்த சிகிச்சை ரேக்ளா காளைக்கு முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT