Last Updated : 12 Mar, 2023 10:42 PM

 

Published : 12 Mar 2023 10:42 PM
Last Updated : 12 Mar 2023 10:42 PM

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2000 பேர் நியமனம் - 10 தினங்களில் முடிவாகும் என அமைச்சர் தகவல்

கள்ளக்குறிச்சி: மருத்துவர், துணை சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் உதவியாளர்கள் என 2000 மருத்துவப் பணியாளர்கள் மாநில மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யும் பணி 10 தினங்களில் முடிவாகும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கள்ளக்குறிச்சியில் அறிவித்தார்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்துவைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஜனவரி மாதம் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.

தற்போது அந்த மருத்துவமனைகளில் படுக்கை, அதிநவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவனைக்கு மேலாக அதிநவீன மருத்துவ உபகரணங்களோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கள்ளக்குறிச்சி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மாவட்டத்திற்கு ஒரு மருந்து கிடங்கு என முதல்வர் அறிவித்த நிலையில், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் தலா ரூ.6 கோடி மதிப்பீட்டில் மருந்துக் கிடங்குகள் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. மேலும், கள்ளக்குறிச்சியில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு, 3 துணை சுகாதார நிலையங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்த அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை நியமித்து வருகிறது. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய பிரிவுகளில் 1546 பணியிடங்கள் உள்ளது. காலிப்பணியிடங்கள் முழுவதும் கடந்த இரு மாதங்களில் நிரப்பப்பட்டு முதல்வரால் பணி ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலம் காலிப்பணியிடம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

1021 மருத்துவர்களை நியமிக்கும் பணி மருத்துவத் தேர்வு வாரியத்தின் மூலம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனிடையே இந்த பணி நியமனம் தொடர்பாக ஏற்பட்டிருந்த சிக்கலுக்கு நீதிமன்றத்தின் மூலம் நேற்று முன்தினம் தீர்வு கிடைத்துள்ளது. எனவே 1021 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு, காலிப்பணியிடத்தில் பணியமர்த்தப்படுவர்.

தமிழகம் முழுவதும் 708 நகர்புற சுகாதார நிலையங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 500 நகர்புற சுகாதார நிலையங்கள் கட்டுமானப் பணி முடிந்து, தயார் நிலையில் உள்ளது. இதற்காக தலா 500 மருத்துவர்கள், துணை சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் உதவியாளர்கள் என 2000 பேர் நியமனத்திற்கான பணியை மாவட்ட சுகாதார சொசைட்டி மேற்கொண்டுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் அந்த பணியிடம் நிரப்பும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணிகள் 10 தினங்களில் முடிவடைய உள்ளது. இதன்பின் தமிழக முதல்வர், 500 நகர்புற சுகாதார நிலையங்களை திறந்து வைப்பார்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x