Published : 12 Mar 2023 06:11 PM
Last Updated : 12 Mar 2023 06:11 PM
மதுரை: மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகரை தாக்கியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 5 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் மீது இரு பிரிவின் கீழும், அவரைத் தாக்கியதாக ராஜேஸ்வரன் கொடுத்த புகாரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ மீது 6 பிரிவுகளின் கீழும் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் வந்த விமானத்தில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி எம்.வையாபுரிபட்டியைச் சேர்ந்த அமமுக-வை சேர்ந்த ராஜேஸ்வரன் (42) என்பவரும் பயணித்தார்.
மதுரை விமான நிலையம் வந்தபின், ராஜேஸ்வரன் 'துரோகியுடன் பயணம் செய்தோமே' என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரன் செல்போனை பறித்துக்கொண்டு அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் அளித்த புகாரின்பேரில், ராஜேஸ்வரன் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தன்னை தாக்கி மிரட்டி, செல்போனை பறித்ததாக ராஜேஸ்வரன் அளித்த புகாரின்பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிவகங்கை தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பழனிசாமி பாதுகாவலர் கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் அக்ரீ கிருஷ்ணமூர்த்தி மகன் (அரவிந்தன்) ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி, தாக்குதல், செல்போன் பறிப்பு , காயம் ஏற்படும் வகையில் கொடூரமாக தாக்குதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக பேசிய அமமுக பிரமுகரை உடனே கைது செய்யக்கோரி திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் செல்வகுமாரிடம் நேரில் புகார் அளித்துள்ளார். அமமுக பிரமுகர் ராஜேஸ்வரனை தாக்கிய அதிமுகவினரை கைது செய்யவேண்டும் என, அமமுக நிர்வாகிகள் டேவிட் அண்ணாத்துரை, மகேந்திரன் உள்ளிட்டோரும் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment