Published : 12 Mar 2023 05:14 PM
Last Updated : 12 Mar 2023 05:14 PM
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து புழுக்கள், ஈக்கள் மொய்த்தநிலையில் கால் அழுகிய நிலையில் இருந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றிய சம்பவத்தில் 2 மருத்துவ மாணவர்கள், ஒரு செவிலியர், பணியாளர் உள்பட 4 பேர் பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ மாணவர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நெருக்கடியான நிலை நீடிக்கிறது. ஆனாலும், அவ்வப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை தாமதமாகுவதாக புகார் எழுவது உண்டு. 'டீன்' ரத்தினவேலு வந்தபிறகு அவர், மருத்துவமனையில் வார்டுகளில் தினமும் ஆய்வு செய்து நோயாளிகளிடம் அவர்கள் பெறும் சிகிச்சை விவரங்கள், குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
அப்படியிருந்தும் மருத்துவர்கள், பலர் பணி நேரத்திலே காணாமல் போய்விடுகிறார்கள். அதனால், நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் தாமதமாகி மரணங்கள் ஏற்படுவதாக குற்றசாட்டு உள்ளது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை பிணவறை எதிரில் 2 நாட்களுக்கு முன் மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்ற ஆதரவற்ற கூலித்தொழிலாளி ஒருவர் காலில் பெரிய புண்ணுடன் மயங்கி கிடந்தார். உடலில் ஈ, எறும்பு புழு மொய்த்த நிலையில் அவரை தன்னார்வலர்கள் மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
காலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை 5 மணியளவில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் வீல் சேரில் காலில் புழுக்களுடன் இருந்த அவரை எங்கிருந்து காலையில் மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்டாரோ அதே இடமான பிணவறைக்கு எதிரே உள்ள சாலையில் ஓரமாக தள்ளிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நோயாளிக்கு அவருக்கான எந்த சிகிச்சையும் அளிக்காமல் அரசு மருத்துவமனை ஊழியர் வலுக்கட்டாயமாக சாலையில் போட்ட இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தன்னார்வலர்கள் துணையுடன் நோயாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
புகாரை தொடர்ந்து நோயாளி அனுமதிக்கப்பட்ட 219வது வாண்டில் பணிபுரிந்த மருத்தவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், செவிலியர், பணியாளர்களிடம் 'டீன்' ரத்தினவேலு விசாரணை மேற்கொண்டார். விசாரைண அடிப்படையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் பணியின் போது அலட்சியமாக இருந்ததாக கூறி பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் டாக்டர்கள் பி.அவிரந்த், எம். ஷியாம், செவிலயர் சுமதி, மருத்துவ பணியாளர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்து 'டீன்' ரத்னவேல் உத்தரவிட்டார்.
இதுபோன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என 'டீன்' ரத்தினவேலு எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT