Published : 12 Mar 2023 03:56 PM
Last Updated : 12 Mar 2023 03:56 PM
சென்னை: தமிழகத்தில் நாளை (மார்ச் 13) நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: "என் பேரன்பிற்குரிய 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
என்ன பரீட்சை கவலையில் இருக்கிறீர்களா? ஒரு கவலையும் வேண்டாம், எந்த பயமும் வேண்டாம். இது இன்னொரு பரீட்சை, அவ்வளவுதான். அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும். எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள்.
உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது இல்லை, உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு போவது, உயர்த்தி விடுவது. அதனால் மீண்டும் சொல்கிறேன், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.
தேர்வைப் பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படியுங்கள். புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக, முழுமையாக எழுதுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் போல நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். முதல்வராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துகிறேன், நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: "பொதுத்தேர்வுகளின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும்.
அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்குத் தெரிந்த அனைவரும் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஊக்குவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: "தமிழ்நாட்டில் 2022-23ம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். வெற்றி, தோல்வியை கருத்தில் கொள்ளாமல் மன அழுத்தம் இன்றி தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் இன்றைய மாணவர்கள் வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றும் விரும்புகின்றேன்" என்று கூறியுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை: "நாளை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். புதிய துறைகளும், தொழில்நுட்பங்களும் உருவாகியிருக்கும் இக்காலத்தில், மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT