Published : 12 Mar 2023 03:29 PM
Last Updated : 12 Mar 2023 03:29 PM
சென்னை: "கண்டோன்மெண்ட் எல்லைக்குள், நீண்ட பல ஆண்டுகளாக, குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு, ராணுவ நிலத்தில் குடியிருப்பதை காரணம் காட்டி வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கண்டோன்மெண்ட் போர்டு தேர்தல் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் சுமார் 15 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கண்டோன்மெண்ட் கழக எல்லக்குள் குடியிருப்போர் அனைவரும் வாக்காளர்களாக இருந்த நிலை மாற்றப்பட்டு, வீட்டு வரி செலுத்துவோர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிபந்தனை விதித்து, கண்டோன்மென்ட் எல்லைக்குள், நீண்ட பல ஆண்டுகளாக, குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு, ராணுவ நிலத்தில் குடியிருப்பதை காரணம் காட்டி வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை நிராகரிக்கும் செயலாகும்.
கண்டோன்மெண்ட் எல்லைக்குள் வசிக்கும் குடிமக்கள் அனைவரும் குடிதண்ணீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கண்டோன்மென்ட் கழகத்தை சார்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்து வரும் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து வந்த அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருக்கும் இந்த நேர்வில் ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு, நீக்கப்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கி கண்டோன்மெண்ட் கழக தேர்தலை நடத்த வேண்டும் .
இதுதொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட்டு அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், மாநில அரசு கண்டோன்மென்ட் கழக எல்லைக்குள் வாழ்ந்து வரும் குடிமக்களின் வாக்குரிமை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT