Published : 12 Mar 2023 01:21 PM
Last Updated : 12 Mar 2023 01:21 PM

பல இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி முடிவு பெறவில்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

கோப்புப்படம்

சென்னை: "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து, அந்தந்த பகுதிகளில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருந்த போதும் மக்களின் அத்தியாவசிய தேவையான சாலை, குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள், இன்னும் சரிவர முழுமைப் பெறாமல் காணப்படுகிறது" என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர மாநகராட்சியில் பல இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து வாகனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி முடிவு பெறாமலும் சாலையின் ஓரம் குழிகள் மூடப்படாமலும் இருக்கிறது.

கடந்த சில மாதத்திற்கு முன்னர் தமிழகத்தில் பெய்த கன மழையால் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதோடு சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் பொழுது சாலை ஒரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணி முடிந்த பிறகும் பல்வேறு இடங்களில் சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளது. இதனால் குடியிருப்போரும், சாலையில் பயணிப்போரும், குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றார்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து, அந்தந்த பகுதிகளில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருந்த பொழுதும் மக்களின் அத்யாவசிய தேவையான சாலை, குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள், இன்னும் சரிவர முழுமைப் பெறாமல் காணப்படுகிறது.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் உள்ளாட்சியின் பணி. ஆனால் உள்ளாட்சியில் நல்லாட்சி தருவோம் என்று பதவிக்கு வந்த பிறகு மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனைக்குரியது. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இந்நிலைதான் நீடிக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளும் போதே மின்சாரத்துறையும் இணைந்து பணியை மேற்கொண்டால் பணிகள் தாமதம் இல்லாமல் விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும். தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மாநில சாலைகளையும், உள்ளாட்சிக்கு உட்பட்ட சாலைகளையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து செப்பனிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x