Published : 12 Mar 2023 04:31 AM
Last Updated : 12 Mar 2023 04:31 AM

தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லியமாக வானிலை முன்னறிவிப்புகள்

சென்னை: தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துல்லிய வானிலை முன்னறிவிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சோதனை முறையில், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சென்னையில் மண்டல அளவிலும், புறநகர் பகுதிகளில் தாலுகாஅளவிலும் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் முறை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மேலும் துல்லியமாக வழங்க வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: முந்தைய காலங்களில் வட தமிழகம், தென் தமிழகம், உள்தமிழகம், கடலோர தமிழகம் அளவில் வானிலை முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது மாவட்ட அளவில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறோம்.

அடுத்த கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சோதனை அடிப்படையில் மண்டல மற்றும் தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குகிறோம். தற்போது பிரபலமடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ரேடார் தரவுகள், மழை மானி, தானியங்கி வானிலை நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் இது சாத்தியமாகியுள்ளது.

இந்த நடைமுறையை மேலும் வலுப்படுத்தி, சென்னை, புறநகர் மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற பகுதிகளிலும், படிப்படியாக தாலுகா அளவில் துல்லிய வானிலை முன்னறிவிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிய இடங்களை கண்டறிந்து மழை மானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x