Published : 12 Mar 2023 06:44 AM
Last Updated : 12 Mar 2023 06:44 AM
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு மாநில அரசு நிறைவேற்றும் சட்டத்தால் தீர்வு கிடைக்காது என்றும், தேசிய அளவில் நடவடிக்கை தேவை என்றும் தமிழக அரசுக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பும்போது, அத்துடன் இணைத்து அனுப்பிய கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, அக். 19-ம் தேதி சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. சில மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறும்போது, ‘‘ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்புவோம். இரண்டாவது முறையாக அனுப்பும்போது, அதை ஆளுநர் நிராகரிக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பும்போது, கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியுள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநர் அந்தக் கடிதத்தில், “ஆன்லைன் சூதாட்டம் கவலை தரக்கூடிய விஷயம். பணத்தை இழக்கும் சிலர், தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட இணையதளம் தொடர்பான விஷயங்களை, ஒரு மாநில அரசால் மட்டும் தடைசெய்ய முடியாது. இது மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரக்கூடியது. இதற்கு தேசிய அளவில் நடவடிக்கை தேவை.
மாநில அரசு மட்டும் சட்டத்தைகொண்டு வருவதால், பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. ஒரு மாநில அரசால் விளையாட்டை ஒழுங்குபடுத்த மட்டுமே முடியும். அதை முற்றிலும் தடைசெய்ய முடியாது. இதை மீறி இந்த சட்டத்தை நிறைவேற்றினால், அது நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக அமையும். இதற்கு பதிலாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT