Published : 12 Mar 2023 06:57 AM
Last Updated : 12 Mar 2023 06:57 AM
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த மருத்துவ முகாம்களில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சுமார் 100 பேருக்கு இந்த புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 வயதுக்கு குறைவானவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நோயாளிகள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது. கர்நாடகா, ஹரியாணா மாநிலங்களில் 2 பேர் இந்த புதிய வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 1,558 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது. மத்திய அரசின்கீழ் இயங்கும் மருத்துவ குழுக்கள் மூலமாக 2,888 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் 2.27 லட்சம் பேர் பயனடைந்தனர். அவர்களில், 2,663 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு, உரிய மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 9,840 பேருக்கு இருமல், சளி போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதித்து உரிய சிகிச்சை பெற வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT