Published : 12 Mar 2023 06:59 AM
Last Updated : 12 Mar 2023 06:59 AM

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது எனக்கு மகிழ்ச்சி - சென்னையில் நடைபெற்ற விழாவில் வெங்கய்ய நாயுடு தகவல்

சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்த சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பின் 25-வது ஆண்டு விழாவில் சிறுநீரக நலனுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நடிகர் ரஜினிகாந்த், நாடக நடிகர் மாது பாலாஜி, இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹைபர் டென்ஷன் அமைப்பின் நிர்வாகி எஸ்.என்.என்.நரசிங்கன், சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் தலைவர் ராஜன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பின் 25-வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறுநீரக நலனுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு பேசியதாவது: சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் செய்து வரும் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது. கடந்த 25 ஆண்டுகளாக சிறுநீரக நோய்களுக்கான மருத்துவச் சேவையை ஏராளமான மக்களுக்கு வழங்கி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த தகவல் பத்திரிகையாளர் குருமூர்த்தி மூலமாக எனக்கு தெரியவந்தது. உடனே ரஜினிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘நீங்கள் நல்ல மனிதர். உங்கள் உடல்நலனுக்கு அரசியல் உகந்ததல்ல. எனவே, அரசியலுக்கு வர வேண்டாம்’ என்று தெரிவித்தேன்.

அரசியல் ஆரோக்கியமற்றது, அரசியலுக்கு வந்தால் உடல்நலத்தோடு இருக்க வேண்டும். ஆனால், அதற்கான சூழல் தற்போதைய அரசியல் காலகட்டத்தில் இருப்பதில்லை. அதனால்தான் ரஜினியிடம் அவ்வாறு தெரிவித்தேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். எனினும், அதன்பின் கரோனா தொற்று பரவலால் தனது முடிவை ரஜினி மாற்றிக் கொண்டார். அது மகிழ்ச்சியாக இருந்தது.

இதை வைத்து இளைஞர்களை அரசியலுக்கு வர வேண்டாம் என கூறுவதாக எண்ண வேண்டாம். நீங்கள் அரசியலுக்கு வரும்போது கொள்கை, நேர்மை, உடல்நலன், சேவை மனப்பான்மை உள்ளிட்ட பண்புகளை பின்பற்றுவது அவசியமாகும். நம் முன்னோர்கள் இயற்கையுடன் இணைந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நமக்கு கற்பித்து சென்றுள்ளனர். ஆனால், இன்றைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சார வாழ்வியலை பின்பற்றி வருகின்றனர். அது நமக்கான வாழ்வியல் முறையல்ல.

இளைஞர்கள் துரித உணவு பழக்கங்களை கைவிட்டு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். நல்ல தூக்கம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, யோகா, மகிழ்ச்சியான மனநிலைஒரு மனிதனுக்கு நீண்ட ஆயுளைத்தரும். தினமும் யோகா செய்தால் உடல்நலன் மேம்படும். அதேபோல், அனைவரும் அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் நாடக நடிகர் மாது பாலாஜி, இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹைபர் டென்ஷன் அமைப்பின் நிர்வாகி எஸ்.என்.என்.நரசிங்கன், சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராஜன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசியலுக்கு வராதது ஏன்? - ரஜினிகாந்த் விளக்கம்: விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: சேப்பியன் அறக்கட்டளையின் நிறுவனரான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் மிகச்சிறந்த சேவையை செய்துவருகிறார். எனக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தபோது மிகவும் சிரமப்பட்டேன். அதன்பின் ரவிச்சந்திரனிடம் சென்றேன். அவரது வழிகாட்டுதலின்படியே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது நலமாக உள்ளேன்.

நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தேன். அந்தச் சூழலில்தான் கரோனா தொற்றின் 2-வது அலை வந்துவிட்டது.அதனால் அரசியலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

எனினும், அறிவித்துவிட்டு பின்வாங்கினால் பயந்துவிட்டதாகக் கூறுவார்கள் என அவரிடம் தெரிவித்தேன். அனைத்தையும் விட உங்களின் உடல்நலன் மிகவும் முக்கியம். பொதுவெளியில், உங்கள் உடல்நலன் குறித்து நானே விளக்கம் அளிக்கிறேன் என்றார். அதையேற்றுதான் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட நேர்ந்தது.

நமது உணவில் உப்பு அதிகமானால் உடலில் எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படும். எனவே, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றினால் நோயற்ற வாழ்வை பெறலாம். மனித உடல் மிகச்சிறந்த இயந்திரமாகும். அதன் செயல்பாடுகள் அசாத்தியமானது. இன்றைய அறிவியல் வளர்ச்சியால் ஒரு துளி ரத்தத்தைக் கூட உருவாக்க முடியாது. இதை எல்லாம் தெரிந்திருந்தும்கூட சில பேர் கடவுள் இல்லை என்பது கூறுவது வியப்பளிக்கிறது. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x