Published : 20 Sep 2017 07:53 AM
Last Updated : 20 Sep 2017 07:53 AM
சென்னை அடையாறில் ரூ.2 கோடி 80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அவரது 90-வது பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி திறந்துவைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று 2015-ம் ஆண்டு, ஆகஸ்ட் 26-ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, அடையாறில் சத்யா ஸ்டுடியோ எதிரில் மணிமண்டபம் கட்டும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் மே மாதம் இறுதியில் நிறைவடைந்தன. இந்நிலையில் இந்த மணிமண்டபம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு தலைவருமான கே.சந்திரசேகரன் கூறும்போது, “அக்டோபர் 1-ம் தேதி சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாள். அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ மணிமண்டபத்தை திறக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அக்.1-ம் தேதிக்குள் திறக்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்” என்றார்.
திருநாவுக்கரசர் கோரிக்கை
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சிவாஜியின் சிலையை கடற்கரை சாலையில் நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி சிவாஜியின் 90-வது பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் அவரை நினைவுக்கூரவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும் சிலையோ நினைவிடமோ சென்னையில் இல்லாத நிலை உள்ளது. எனவே அக்.1-ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ சிவாஜி மணிமண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள் ளார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மணிமண்டபத்தை கட்டும் பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன. மின் விளக்குகள், தண்ணீர் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. மணிமண்டபத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட அரங்கத்தில் சிவாஜிகணேசனின் 188 புகைப்படங்களை காட்சிக்கு வைக்கும் பணி மட்டுமே பாக்கி உள்ளது. இப்பணியை செய்தி மக்கள் தொடர்புத் துறைதான் செய்ய வேண்டும்” என்றார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்)சரவணனிடம் கேட்டபோது, “மணிமண்டபத்தில் உள் அலங்கார வேலை நடந்து கொண்டிருக்கிறது. 10 சதவீத வேலை பாக்கி உள்ளது. எப்போது திறப்பு விழா என்று இன்னமும் முடிவாகவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT