Published : 11 Mar 2023 06:01 PM
Last Updated : 11 Mar 2023 06:01 PM
புதுச்சேரி: “பிரதமர் மோடியின் அஸ்தமன காலத்துக்கு அதானி ஒரு கருப்பொருளாக இருக்கிறார்” என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கம்பன் கலையரங்கில் இன்று (மார்ச்11) நடைபெற்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரால்டு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமையில் 248 நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:“இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்த வேண்டும்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் சமயத்தில் மத்தியலிருந்து வந்த பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அகியோர் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பார்கள் என்பதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணி சேர்வதாக ரங்கசாமி கூறினார். ஆனால் 2 ஆண்டுகள் ஆகவிட்டது. பாஜகவினர் மக்களிடம் பொய்யை சொல்லி நாங்கள் வளர்ச்சியை கொடுத்துள்ளோம் என்கிறார்கள்.
நாட்டில் 24 சதவீதம் பேருக்கு வேலையில்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகமாகி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால், இன்று கஞ்சா, அபின், பிரவுன் சுகர். இதுதான் இந்த ஆட்சியில் நடக்கிறது. தடுக்கி விழுந்தால் மதுக்கடையில் தான் விழ வேண்டும். 900 மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார் வந்துள்ளது. காலை ரூ.20 லட்சம் கொடுத்தால், மாலையே ரெஸ்டோர் பார் திறக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும். ஜனநாயக முறையில் அனைவருக்கும் பங்கு கொடுக்கிறார்கள்.
புதுச்சேரியில் எல்லா துறைகளிலும் ஊழல். குடிமை பொருள் வழங்கல் துறையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் முன்னிலையில் விண்ணப்பத்துக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பாஜக எம்எல்ஏவே கூறுகிறார். இப்படி ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றி கவலையில்லை. மத்திய அரசு உதவியும் இல்லை. மாநில வருவாயும் பெருக்கவில்லை. மில்களை திறக்கவில்லை. இப்படி ஊழல் மலிந்த ஆட்சியாக ரங்கசாமி ஆட்சி இருக்கிறது. இதை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை காங்கிரஸ் மூலம் நடத்தியுள்ளோம். இளைஞர் காங்கிரஸ் இயக்கம் முன்வந்து இந்த போராட்டங்களை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதானி ஊழல் குறித்து மோடி பதில் சொல்லவில்லை. இதுகுறித்து கேட்டால் மவுனமாக இருக்கிறார்கள். மோடியும், அதானியும் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடியின் அஸ்தமன காலத்துக்கு அதானி ஒரு கருப்பொருளாக இருக்கிறார். மோடி அரசை எதிர்த்தும், புதுச்சேரியில் ஆளுகின்ற டம்மி என்.ஆர்.காங்கிரஸ் அரசை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்த வேண்டும்.
வரும் 13ம் தேதி அதானி ஊழல் சம்பந்தமாகவும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, வேலையில்லா திண்ட்டாட்த்தை கண்டித்தும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதை காங்கிரஸ் மட்டும்தான் கொண்டு செல்ல முடியும். புதுச்சேரியில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி. காங்கிரஸ் கட்சி மட்டும் தான் மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை ஏற்கும். இதில் எந்தவிதமான சமரசமோ, எந்தவிதமான மாற்றுக்கருத்தோ கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தான் நிற்பார். அவரை எல்லோரும் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT