Published : 11 Mar 2023 07:02 AM
Last Updated : 11 Mar 2023 07:02 AM

ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியது தவறு: ஆளுநர் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட நூலகங்களை ப.சிதம்பரம் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் நூலகங்கள் இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் எம்.பி.நிதியை பெற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மகாத்மா காந்தி பெயரில் நூலகங்களை ஏற்படுத்தி வருகிறது. இதை தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு. இதே விஷயத்தில் அவசர சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், முழு சட்டமாக வரும்போது எப்படி குறை கண்டுபிடித்தார். மீண்டும் இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குற்றவியல் சட்டத்தில் வருகிறது. குற்றவியல் சட்டத்தை நிறைவேற்றுவது மாநில அரசின் உரிமை. எனவே, அரசியல் சாசனப்படி ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.

தூண்டுவோர் மீது நடவடிக்கை: தமிழகத்தில் மற்ற மாநில மக்கள் சகோதரர்களாக வாழ்கின்றனர். திடீரென வடமாநில மக்கள் மீது துவேஷம் வரக் காரணம் என்ன? பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தூண்டி விடுகின்றனர். தூண்டிவிடுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று கூறுகின்றனர். அது வளர்ச்சியல்ல, வீக்கம்தான். வீக்கம்கூட வளர்ச்சியாகத்தான் தெரியும். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அடக்கி வாசிக்கின்றனர். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் வைஸ்ராய் போன்று செயல்படுகின்றனர். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். அப்போது, மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x