Published : 10 Mar 2023 11:24 PM
Last Updated : 10 Mar 2023 11:24 PM
புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மி போன்ற சைபர் கிரைம் தொடர்பான விவகாரத்தில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே அடுக்குமாடிக் கட்டிடமாக பாஜக மாவட்ட அலுவலகம் கட்டப்பட்டது. இதை, கிருஷ்ணகிரியில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று (10-03-23)திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாவட்டத் தலைவர்கள் அ.விஜயகுமார், செல்வம் அழகப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியது: அரசியல் அமைப்பு சட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளில் சட்டம் இயற்றுவது தொடர்பாக முரண்பாடு வரும்போது மத்திய அரசு எடுக்கும் முடிவுதான் சரியாகும். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் 6 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டார். அந்த காலகட்டத்தில் ஒருவரையாவது தமிழக அரசு கைது செய்ததா?.
சைபர் கிரைம் தொடர்பான விவகாரத்தில் சட்டம் கொண்டு வருவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இதைத்தான் ஆளுநர் கூறியுள்ளார். இதுதொடர்பாக திருத்த மசோதாவை தமிழக அரசு அனுப்பி வைத்தால், அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
அதிமுக, பாஜகவுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் திட்டமிட்டபடி ஏப்.14-ம் தேதி தொடங்கும். இந்த நடைபயணம் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தியின் நடைபயணத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நடைபெற்று முடிந்த 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியைதான் சந்தித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ரூ.500 கோடி செலவு செய்துவிட்டு வெற்றி பெற்று விட்டதாக கூறுவதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. அங்கு பணிபுரிந்த தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT