Published : 10 Mar 2023 11:04 PM
Last Updated : 10 Mar 2023 11:04 PM
சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூரில் மீண்டும் ரயில் நிலையம் அமைக்க வேண்டும், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரை ரயில்வே காலனியிலுள்ள வைகை இல்லத்தில் நடந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்என். சிங் வரவேற்றார். எம்பிக்கள் வைகோ(ராஜ்யசபா), திருநாவுக்கரசர் (திருச்சி), சு.வெங்கடேசன் (மதுரை) மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ரவீந்திரநாத் (தேனி), வேலுச்சாமி (திண்டுக்கல்), கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), தனுஷ்குமார் (தென்காசி) மற்றும் மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏற்கனவே சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு எழுத்துப்பூர்வமாக கொடுத்த கோரிக்கை, ஆலோசனைகளுக்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்என். சிங் பதில் அளித்தார். இருப்பினும், பொது மேலாளர், கோட்ட அதிகாரிகளிடம் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் குறித்த தங்களது கோரிக்கை மனுக்களை ஒவ்வொரு எம்பியும் தனித்தனியே வழங்கி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
வைகோ பேசுகையில், "ராஜபாளையம், சங்கரன்கோயில் இடையே கரிவலம்வந்தநல்லூரில் ரயில் நிலையம் மீண்டும் ஏற்படுத்த வேண்டும், ரயில்வே தேர்வு வாரியத்தின் (ஆர்ஆர்பி சென்னை) நிர்வாகத்தை கட்டுபாடின் கீழ் மதுரை கோட்டத்தை கொண்டு வரவேண்டும். திண்டுக்கல் - கோவில்பட்டி இடையே மின்சாரத்தால் குறைந்த, நடுத்தர தூரம் வரை இயங்கும் மெமு ரயில் வேண்டும், கொங்கன் ரயில்வே வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் தேவை. தென்காசி வழியாக நெல்லையில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்கவேண்டும், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் சாத்தூரிலும், பொதிகை திருமங்கலத்திலும் நின்று செல்லவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினேன்" என்றார்.
சு.வெங்கடேசன் எம்பி பேசுகையில், "தெற்கு, மேற்கு மாவட்டங்களை இணைக்கும் வகையில் மேட்டுப்பாளையம் - தூத்துக்குடிக்கு தினசரி ரயில் இயக்க கோரினேன். வாரத்தில் 3 நாள் இயக்க தயாராக இருப்பதாகவும், ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளிக்கப்பட்டது. விருதுநகர்- திண்டுக்கல்லுக்கு தொடர் ‘புஸ்புல்’ ரயில் அதாவது திண்டுக்கல் செல்லும் அதே ரயில் மீண்டும் விருதுநகருக்கு திரும்புவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.
பெண் லோகோ பைலட்களுக்கு (ரயில் ஓட்டுநர்) பணியின்போது, ரயிலில் கழிப்பறை வசதியில்லை. அதுபற்றி கோரியபோது, இனிமேல் தயாரிக்கும் ரயில் பெட்டிகளில் அவர்களுக்கான கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். கூடல் நகர் 2வது முனையமாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பொது மேலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் பதில் அளித்தனர்.
தூரத்ததை கணக்கில் கொள்ளாமல் மதுரை- நெல்லை, மதுரை - திருச்சிக்கு செல்லும் பயணிகள் பயன்பெறும் வகையில் சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். கரேனாவிற்கு பிறகு ஊடகவியலாளர்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன்" என்றார்.
இதுபோன்று, கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு எம்பியும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமேலாளரிடம் வலியுறுத்தினர். மேலும், அவர்கள் ஏற்கனவே கோரிய கோரிக்கைகளுக்கும் பதிலும் அளிக்கப்பட்டது.
பெண் லோக்கோ பைலட்கள் வைகோவிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘‘பெண் ரயில் ஓட்டுநர்கள் கருவுற்றிருக்கும் போது, இலகுவான பணி வழங்க வேண்டும். மாதவிடாய் காலத்திலும், அலுவலகத்தில் இலகுவான பணி வழங்கவேண்டும்’’ என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த வைகோ இந்த நியாயமான கோரிக்கை குறித்து பாராளுமன்றத் தில் கட்டாயம் பேசுவேன் என உறுதியளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT