Published : 10 Mar 2023 08:24 PM
Last Updated : 10 Mar 2023 08:24 PM
கிருஷ்ணகிரி: “பாஜக தியாகத்துக்கு பெயர்போன கட்சியாகும்” என கிருஷ்ணகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் மாவட்ட பாஜக அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அவர், 75 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து அங்கு நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, தேனி, விருதுநகர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய பாஜக அலுவலகங்களைத் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளியில் நடந்த பாஜக கட்சி அலுவலக திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: ''நடந்து முடிந்த வடகிழக்கு மாநிலத் தேர்தல்களில் நாம் அமோக வெற்றி பெற்றுள்ளோம். இது மோடி அரசுக்கு மக்கள் அளித்த சான்றாகும். பாஜக தியாகத்துக்கு பெயர்போன கட்சியாகும். இந்த நேரத்தில் இக்கட்சிக்காக உழைத்து மறைந்த ஆடிட்டர் ரமேசுக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன்.
பாஜக அரசின் திட்டங்களை நாம் வீடு, வீடாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட். தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக ஆட்சியில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மோடி அரசின் திட்டங்களை, பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்,'' என்றார்.
இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, "மக்களின் பிரச்சினைகளை பாஜக தட்டி கேட்கும். திமுக அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதனை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்றார். - முழுமையாக வாசிக்க > “திமுக அரசை அகற்றும் கட்டாயத்தில் உள்ளோம்” - கிருஷ்ணகிரியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு
இக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது. வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது.
மக்கள் அரசியலால் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பாஜக. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பாஜக தான்” என்று அவர் பேசினார். மேலும் வாசிக்க > “தமிழகத்தில் பாஜகவால் மட்டுமே சிறந்த ஆட்சியை தர முடியும்; தாமரை மலரும்” - கிருஷ்ணகிரியில் ஜே.பி.நட்டா பேச்சு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT