Published : 10 Mar 2023 07:10 PM
Last Updated : 10 Mar 2023 07:10 PM
கிருஷ்ணகிரி: "மக்களின் பிரச்சினைகளை பாஜக தட்டி கேட்கும். திமுக அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதனை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்று கிருஷ்ணகிரியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் மாவட்ட பாஜக அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அவர், 75 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து அங்கு நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, தேனி, விருதுநகர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய பாஜக அலுவலகங்களைத் திறந்து வைத்தார்.
அண்ணாமலை பேச்சு: பாஜக அலுவலக திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ''தமிழகத்தில் எப்போதும் இல்லாத ஒரு சரித்திரம் இப்போது நமது கண்முன்பு நடக்கிறது. ஒரே நேரத்தில் 10 இடங்களில் நமது கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.பி.நட்டா தலைவராக பொறுப்பேற்ற போது தமிழகம் வந்தார். அப்போது மாநில தலைவராக இருந்த முருகன், அவரை அழைத்து சென்று திருவள்ளூர் கட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அந்த மாவட்ட அலுவலகத்துடன் சேர்த்து இன்றைய தினம் 10 மாவட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
திரிபுரா, மேகாலாயா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. நம்மை பொறுத்தவரையில் கட்சி அலுவலகம் என்பது நமக்கு கோயில். இக்கட்சி தியாகத்தால் வளர்க்கப்பட்ட கட்சி. எத்தனையோ பேர் கட்சி துண்டு அணிந்து உயிர் விட்டு இருக்கிறார்கள். இன்றைய தினம் கட்சி அலுவலகங்கள் திறப்பதற்கு காரணமாக இருந்த முன்னாள் தலைவர்கள் எல்.முருகன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு எனது நன்றிகள்.
தமிழகத்தில் பாஜக தனி முத்திரை பதித்து வருகிறது. எதிர்த்து குரல் கொடுக்கிறோம். ஒரு தொண்டன் எதிர்த்து கேட்கிறான். சிறை செல்கிறான். மீண்டும் வெளியே வந்து எதிர்த்து கேட்கிறான். மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்போம். அதற்காக எந்த பிரச்சினைகள் வந்தாலும் தயங்க மாட்டோம். இது தொண்டர்களுக்கான கட்சி. இதை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது. திமுக அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதனை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இன்னும் 12 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளது.
விவசாயிகளுக்கு, மகளிருக்கு, இளைஞர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை மோடி நிறைவேற்றி உள்ளார். 2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் வேகமாக பணியாற்ற வேண்டும். அடிமட்டத்தில் இருந்து நாம் கட்சியை பலப்படுத்திட வேண்டும். நமது கட்சி மற்றும் கூட்டணி எம்பிக்கள், மக்களவையில் பணியாற்ற வேண்டும். மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து உங்களுக்கான அரசாக பாஜக உள்ளது'' என்று அவர் அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது. வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது.
மக்கள் அரசியலால் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பாஜக. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பாஜக தான்” என்று அவர் பேசினார். மேலும் வாசிக்க > “தமிழகத்தில் பாஜகவால் மட்டுமே சிறந்த ஆட்சியை தர முடியும்; தாமரை மலரும்” - கிருஷ்ணகிரியில் ஜே.பி.நட்டா பேச்சு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT