Published : 10 Mar 2023 06:33 PM
Last Updated : 10 Mar 2023 06:33 PM
சென்னை: "நெய்வேலி நிறுவனத்தில் பறிபோகும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தமிழர் நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்புக் காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. நிலங்களை அபகரித்து நெய்வேலி நிறுவனத்திற்கு அளிப்பதற்காக திமுக அரசு காவல்துறையினரின் மூலம் அடக்குமுறைகளை ஏவி, அப்பாவி வேளாண் பெருங்குடி மக்களைக் கைது செய்வது என்பது எதேச்சதிகாரபோக்காகும்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத் தொடங்குவதற்காகத் தங்கள் நிலங்களை விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பூர்வகுடி தமிழர்கள் தற்போது வெறும் கூலிகளாக மட்டுமே வேலைசெய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி நிறுவனத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி மண்ணின் மைந்தர்கள் இல்லாத கொடுஞ்சூழல் உள்ளது. ஏற்கெனவே நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தமிழ் இளைஞர்களுக்குப் பணி வழங்காமலும் தொடர்ந்து இனபாகுபாடு கடைப்பிடிக்கிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம்.
விரைவில் தனியாருக்கு தாரைவார்க்கப் போகும் நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பறித்து ஒப்படைக்க தமிழ்நாடு அரசு துணைபோவது ஏன்? நெய்வேலி நிறுவனத்தில் பறிபோகும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தமிழர் நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்புக் காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். ஏற்கெனவே நிலக்கரி எடுப்பதற்காக தமிழர்களிடம் பறிக்கப்பட்ட நிலங்களில் பயன்படுத்தாது இருப்பில் உள்ள நிலையில், மேலும், மேலும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வலுக்கட்டாயமாக எதற்குப் பறிக்க வேண்டும்?
நிலத்திற்கு உரிய இழப்பீடும், நிலம் வழங்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற பூர்வகுடி தமிழர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் நெய்வேலி நிறுவனத்திற்கு, நிலங்களை அளிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் கட்டாயப்படுத்துவது எவ்வகையில் நியாயமாகும்? பொதுத்துறை நிறுவனமாக இருக்கும்போதே உரிய இழப்பீடும், நிரந்தரப் பணியும் வழங்க மறுக்கும் நிலையில், விரைவில் தனியார் மயமாகப்போகும் நிறுவனத்தை நம்பி தமிழர்கள் தங்கள் நிலங்களை எவ்வாறு ஒப்படைக்க முடியும்? நிலங்களை வழங்க மறுக்கும் விவசாயிகளை மிரட்டி திமுக அரசு அச்சுறுத்துவதும், வெளியில் வரமுடியாதபடி காவல் துறையைக் கொண்டு அடைத்து வைப்பதும், கைது செய்து சிறைபடுத்துவதும் கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
ஆகவே, தங்களின் நிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளை கைது செய்யும் போக்கினை திமுக அரசு நிறுத்துவதோடு, கைது செய்யப்பட்ட வேளாண் பெருங்குடி மக்கள் மீது எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், தனியார் மயமாகவிருக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வலுக்கட்டாயமாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்குத் துணைபோவதையும் திமுக அரசு கைவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT