Published : 10 Mar 2023 05:26 PM
Last Updated : 10 Mar 2023 05:26 PM
திருச்சி: “இரவல் ஆளுநராக இருந்தாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும். இரக்கமுள்ள ஆளுநராகவே நான் பணியாற்றி வருகிறேன்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொள்ள வந்த தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “புதுச்சேரியில் 13 ஆண்டுகளுக்கு பின் பட்ஜெட் தாக்கல் நடைபெற விருக்கிறது. இந்த பட்ஜெட் மூலம் புதுச்சேரி பல வகைகளில் முன்னேறி வருகிறது என்பதற்கு இதுவே முன்னுதாரணம்.
இரவல் ஆளுநர் என்று விமர்சிக்கப்படும் நிலையில்தான் முழுநேரம் பட்ஜெட் தாக்கல் செய்கிறோம். கரோனா காலகட்டத்தில் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருக்கிறோம். இரவல் ஆளுநராக இருந்தாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும். இரக்கமுள்ள ஆளுநராகவே நான் பணியாற்றி வருகிறேன்.
பாரதியாரையும், பாரதிதாசனையும் மேற்கோள்காட்டி ஒரு மணி நேர பட்ஜெட் உரையை நான் முழுவதுமாக வாசித்ததை திமுக உறுப்பினரே பாராட்டியுள்ளனர். கட்சி பாகுபாடு பார்க்காமல், புதுச்சேரியை முன்னேற்றியாக வேண்டும் என்ற முழுமையான எண்ணம் உள்ள ஆளுநராக செயலாற்றி வருகிறேன்.
தமிழக ஆளுநர் குறித்து நான் கூற விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு சகோதரியாக மகளிர் தின விழாவில் பங்கேற்க தமிழகத்துக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. யார் என்ன சொன்னாலும் தமிழகத்திற்குள் தமிழிசை வந்துகொண்டுதான் இருப்பேன்'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT