Published : 10 Mar 2023 03:16 PM
Last Updated : 10 Mar 2023 03:16 PM
சென்னை: "விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று அறப்போர் இயக்கம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அந்த இயக்கத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான, உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கிறது.
விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக @arappor மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (3/3)
விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக அறப்போர் இயக்கத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "டாஸ்மாக்கில் குடோனில் இருந்து கடைகளுக்கு எடுத்து செல்லும் போக்குவரத்து டெண்டர்கள் மண்டல ரீதியாக 43 டெண்டர்கள் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் போடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த டெண்டர்கள் அனைத்தும் ஈ டெண்டர்களாக போடப்படாமல் பாக்ஸ் டெண்டர்களாக போடப்பட்டுள்ளது. டெண்டர் ஆவணம் மட்டுமே இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும் . ஆனால் டெண்டர் ஆவணங்களை நேரில் சென்று தான் சமர்ப்பிக்க முடியும். நாங்கள் முழுமையான இ-டெண்டர் கொண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு, ஏற்கெனவே பல துறைகளில் நடைமுறையில் இருக்கும் ஈ டெண்டர் முறையை கூட பின்பற்றாமல் பாக்ஸ் டெண்டர் ஆக போட்டு அதன் மூலம் குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு இந்த டெண்டர்களை வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது.
எனவே, இந்த டெண்டர்களை உடனே ரத்து செய்துவிட்டு முழுமையான ஈ டெண்டர்களாக விடப்பட வேண்டும் என்ற புகாரை அறப்போர் இயக்கம் தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளது.
இ-டெண்டர் போடாமல் தொடர்ந்து பாக்ஸ் டெண்டர் போடும் டாஸ்மாக்கின் அமைச்சர் செந்தில்பாலாஜி, இ-டெண்டர் போடாமல் அவர் துறையில் வேண்டுமென்றே பாக்ஸ் டெண்டர் போடுவதன் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு கூற வேண்டும். பாக்ஸ் டெண்டர் ஊழலுக்கு வழிவகை செய்யக்கூடியது என்பது நன்றாகத் தெரிந்தும் அவர் துறை, ஏன் இதைத் தொடர்ந்து செய்கிறது என்பதை கூற வேண்டும். தமிழ்நாடு அரசு உடனே இந்த டெண்டர்களை ரத்து செய்து முழுமையான இ-டெண்டர்களை போட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT