Published : 30 Sep 2017 08:29 AM
Last Updated : 30 Sep 2017 08:29 AM
ஓசூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால், தென்பெண்ணையில் நீர் பெருக்கு ஏற்பட்டு கெலவரப்பள்ளி அணையில் 43.20 அடி அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து 2,560 கன அடியில் இருந்து நேற்று காலை விநாடிக்கு 4,485 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் மதகு வழியாக வெளியேற்றப்பட்ட நீர் நுரையாக பொங்கி வெளியேறத் தொடங்கியது. சிறிது நேரத்தில் அணையின் மதகு பகுதி மற்றும் அணையை ஒட்டியுள்ள தட்டிகானப்பள்ளி கிராம சாலையின் இருபுறமும் நுரை படர்ந்து மலைபோல குவிந்துவிட்டது. இதனால், அணையின் முகப்பு பகுதி முழுவதும் நுரையால் மறைக்கப்பட்டது.
பொதுப்பணித் துறையினர் உடனடியாக வந்து நுரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஓசூர் துணை ஆட்சியர் சந்திரகலா நேரில் பார்வையிட்டு பொதுப்பணித் துறையினரிடம் விசாரித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவனும் அணைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பரிசோதனைக்காக அணை நீரை மாதிரி எடுத்துச் சென்றனர்.
இது குறித்து ஆட்சியர் கதிரவன் கூறும்போது, “அணை நீர் நுரைத்து வெளியேறுவதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் நீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்யவுள்ளனர். இதுகுறித்த அறிக்கை கிடைக்கும் வரை மக்கள் குடிநீர் தேவைக்காகவும் கால்நடைகளுக்கும் அணை நீரை பயன்படுத்த வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் மக்களும் விவசாயிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 4000 கன அடி வீதம் வெளியேற்றப்படும் நீரால் சூளகிரி-பார்த்தகோட்டா இடையிலான தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 16 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாலத்தை யாரும் கடக்காமல் இருப்பதற்காக வருவாய்த் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் நீர் நேரடியாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு செல்கிறது. இந்த அணையில் முழுக் கொள்ளள வான 52 அடியில் 51 அடி உயரத்துக்கு நீர் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கெலவரப்பள்ளி அணை நீரும் வந்து கேஆர்பி அணைக்கு வந்து சேருவதால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும். எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு 42-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT