Published : 10 Mar 2023 06:05 AM
Last Updated : 10 Mar 2023 06:05 AM

வேலூர் | ஆவின் நிர்வாகத்தில் நிலவும் குளறுபடியால் பால் உப பொருட்கள் உற்பத்தியில் கடும் தட்டுப்பாடு? - முகவர்கள் சங்கத்தினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

வேலூர்: வேலூர் ஆவினில் பால் உப பொருட்கள் உற்பத்தியில் தட்டுப்பாடு நிலவுவதால் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஆவின் பால் உப பொருட்கள் உடனுக்குடன் விற்பனை ஆவதாக ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் ஆவினில் தினசரி 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பால் உப பொருட்களான நெய், பால் கோவா, தயிர், மோர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு ஆவின் முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரை கடந்த 6 மாதங்களாக குளறுபடிகளுடன் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு குறித்த நேரத்துக்கு பால் பாக்கெட்டுகள், தயிர், மோர் பாட்டில்கள் வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், வேலூர் ஆவின் நிர்வாகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் ஒன்றியத்தின் நிதி நிலையை அதிகரிக்கவும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆனால், வேலூர் ஆவின் நிர்வாகத்தை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என தெரியாமல் ஆவின் பால் முகவர்கள் புலம்பி வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று தொடங்கும் அந்த கருத்தில், ‘ஆவின் பால் வரத்து குறைந்து போனதால் ஆவின் உப பொருட்களான நெய், தயிர், வெண்ணெய் உள்ளிட்டவற்றின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த உண்மை நிலவரத்தை எடுத்துக்கூற தவறிய அதிகாரிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. பால் கொள்முதல் அதிகரித்து பால் பாக்கெட்டுகள், உப பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஆவின் பால் முகவர்களிடம் விசாரித்தபோது, ‘‘கடந்தாண்டு தீபாவளிக்கு பிறகு ஆவின் நெய்யை காணவில்லை. 3 நாள் காலாவதி தேதி கொண்ட ஆவின் மோர் எங்களுக்கு ஒரு நாள் இருக்கும்போது வருகிறது. தயிர் குறித்து சொல்ல வேண்டியதில்லை. ஆவினுக்கு பணத்தை கட்டி தனியார் தயிர் பாக்கெட்டை வாங்க வேண்டி இருக்கிறது.

ஆர்டர் கொடுக்குமாறு.... ஆவின் பால் கோவா, இனிப்புகளை கண்ணில் காட்டுவதே இல்லை. உற்பத்தி செய்தால்தானே காட்டுவார்கள். கோடை காலம் தொடங்கிய நிலையில் ஐஸ்கிரீம் கிடைக்கவில்லை. ஆனால், ஆவின் மில்க் ஜூஸ் பாக்கெட்டுகளுக்கு ஆர்டர் கொடுக்குமாறு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி இருப்பதைப் பார்த்து சிரிக்க வேண்டி இருக்கிறது.

ஆவின் பால் கோவா தயாரிக்க நடவடிக்கை எடுக்காமல் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பால் கோவா கம்பெனிக்கு தினசரி 300 லிட்டர் பால் அனுப்புகிறார்கள்’’ என்றனர்.

இதுகுறித்து, ஆவின் பொது மேலாளர் ரவிக்குமாரிடம் கேட்டதற்கு, ‘‘ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைந்த பிறகு ஆவின் பால் விற்பனை 65 ஆயிரம் லிட்டரில் இருந்து 81 ஆயிரம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆவின் நெய் தட்டுப்பாடு இருந்தாலும் ஆவின் நெய் விலை குறைவாக இருப்பதால் விற்பனைக்கு சென்ற 2 நாளில் தீர்ந்துவிடுகிறது.

தனியார் நெய்யை விட ஆவின் நெய் விலை 300 வரை குறைவாக உள்ளது. மோர் பாட்டில் விற்பனை 1,000 லிட்டராக இருக்கிறது. இது வரும் ஏப்ரல், மே மாதங்களில் 10 ஆயிரம் லிட்டராக அதிகரிக்கும். ஐஸ்கிரீம் இப்போது 5 ஆயிரம் லிட்டர் விற்பனையாகிறது.

ஆவினில் தினசரி 1.15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். இதில், 30 ஆயிரம் லிட்டர் சென்னைக்கு பாலாக அனுப்பி வைக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x