Published : 24 Sep 2017 07:02 AM
Last Updated : 24 Sep 2017 07:02 AM
விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை பதுக்கல் செய்தாலோ அல்லது அதிக விலைக்கு விற்றாலோ அதுகுறித்து தெரிந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் பிரத்யேகமாக செல்போன் ‘ஆப்’ மற்றும் இணையதளப் பக்கத்தை உருவாக்கியுள்ளன.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 62 லட்சம் எக்டேர் நிலத்தில் (ஒரு எக்டேர் என்பது மூன்றரை ஏக்கர்) பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கரீப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) 16 லட்சம் எக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் இந்த பருவத்தில் 10 லட்சம் எக்டேரில் நெல், பருத்தி, கரும்பு, மக்காச்சோளம், ராகி, கம்பு வரகு, நிலக்கடலை, சூரியகாந்தி, சாமை, எள்ளு, ஆமணக்கு ஆகியன சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ரபி பருவத்தில் (அக்டோபர் முதல் மார்ச் வரை) 46 லட்சம் எக்டேர் பயிர் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயத்தில் விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியன முக்கியமான மூலப்பொருட்களாகும். இவற்றில் உரம் கிடைப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் உள்ளது. உரிய நேரத்தில் கிடைக்காது. டீலரிடம் போய் கேட்டால் உரம் இருப்பு இல்லை என்றோ ஒருசில நாட்களில் லோடு வந்துவிடும் என்றோ சொல்வார்கள். ஆனால், செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்பார்கள். இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி அதிகாரிகளைப்போல ஒவ்வொரு விவசாயியும் தனது பகுதியில் உள்ள அரசு கிடங்குகள் அல்லது தனியார் டீலரிடம் உரம் எவ்வளவு இருப்பு உள்ளது என்றும் அதன் விலை எவ்வளவு என்றும் ஆன்-லைன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதனால் உரம் தட்டுப்பாடின்றி உரிய விலைக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடையாளக் குறியீடு
இதற்காக தமிழக வேளாண்மைத் துறை வருவாய்த் துறையுடன் இணைந்து விவசாயிகள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது. அதன்படி, 68 லட்சம் விவசாயிகளின் விவரங்கள் தகவல் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த விவரங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் இருப்பு, விலை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள தமிழக வேளாண்மைத் துறை www.tnagrisnet.tn.nic.in என்ற இணையதளப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இதைப் பயன்படுத்த ஒவ்வொரு விவசாயிக்கும் பிரத்யேக அடையாளக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
கணினி அல்லது செல்போன்களில் மேற்கண்ட இணையதளப் பக்கத்தை திறந்ததும் அதில் எப்.சி.எம்.எஸ். (Farmer Crop Management System) என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது வரும் பட்டியலில் ‘இன்புட்’ என்பதை கிளிக் செய்தால் விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளின் இருப்பு உள்ளிட்ட விவரங்களைப் பார்க்கலாம். மாவட்டம், கிராமம், டீலர்களின் பட்டியல் ஆகியவற்றுடன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களின் இருப்பைத் தெரிந்து கொள்ள முடியும்.
உரத் தட்டுப்பாடு
இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போது 5 லட்சம் டன் உரங்கள் இருப்பு உள்ளன. டெல்டா மாவட்டங்களில் (ஏழு மாவட்டங்கள்) மட்டும் 1.25 லட்சம் டன் உரங்கள் இருப்பு உள்ளன. இம்மாத இறுதிக்குள் மேலும் 2 லட்சம் டன் உரங்களை மத்திய அரசு அனுப்பும். விதைகள் குறித்து ‘அக்ரிஸ்நெட்’ என்ற இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ள உரம், விதைகளின் இருப்பை தெரிந்து கொள்ளலாம். தனியாரிடம் உள்ள இருப்பினையும் தெரிந்து கொள்ள முடியும்.
கணினி வசதி இல்லாத விவசாயிகள் நகர்ப்புறத்தில் இருப்பதைப் போல 4 கிராமங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டுள்ள 4,500 பொது சேவை மையங்களுக்குச் சென்று இந்த இணையதளத்தில் தேவையான விவரங்களைப் பார்க்க இயலும். இதுதவிர வட்டார அளவில் உள்ள வேளாண் அலுவலகங்களிலும் இந்த விவரங்களை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். உரம் கிடைப்பதில் சிரமம் இருந்தாலோ, முறைகேடு நடப்பதாக அறிந்தாலோ இந்த இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார். மேற்கண்ட விவரங்களை கிசான் சுவிதா (kisan suvidha) என்ற செயலியை செல்போனில் டவுன்லோடு செய்தும் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT